சென்னை: 'அண்ணா பல்கலை துணை வேந்தர் சுரப்பாவை, உடனே, 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:சுரப்பா மீதான ஊழல் புகார்களை விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில், விசாரணை ஆணையம் அமைக்கப்பட்ட பின்னும், அவர் பதவியில் தொடர்வது கேலிக்கூத்தாக இருக்கிறது.தற்காலிக ஆசிரியர்கள்நியமனத்தில் மட்டும், 80 கோடி ரூபாய் லஞ்சம்கைமாறியுள்ளது என, சுரப்பா மீதும், துணை இயக்குனர் சக்திநாதன் மீதும், பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.
அவர்கள் இருவரையும், சஸ்பெண்ட் செய்யாமல் இருப்பது, திரைமறைவில் என்ன பேரம் நடக்கிறதோ என்ற, சந்தேகத்தை எழுப்பியுள்ளது.தி.மு.க., ஆட்சியில், கோவை அண்ணா பல்கலை துணை வேந்தராக இருந்த ராதாகிருஷ்ணன், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். அ.தி.மு.க., ஆட்சியின் போது, அண்ணா பல்கலை துணை வேந்தர் மன்னர் ஜவஹர், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சுரப்பாவுக்கு மட்டும் ஏன் விதி விலக்கு? நீதிபதி கலையரசன்,விசாரணை துவங்கப் போகிற நிலையில், உடனே அவரை, சஸ்பெண்ட் செய்வது தான், நேர்மையான நியாயமான விசாரணைக்கு வழிவிடும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.விசாரணையை ரத்து செய்ய வலியுறுத்தல்அண்ணா பல்கலை பேராசிரியர்கள் சங்கத் தலைவர் அருள்அறம் மற்றும் செயலர் சந்திரமோகன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:அண்ணா பல்கலை துணை வேந்தர் சுரப்பா மீது, ஊழல் குற்றம்சாட்டி, அவருக்கு எதிராக விசாரணை நடத்தப்படும் என, தமிழக அரசு அறிவித்திருப்பது, பேராசிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சுரப்பா தலைமையிலான நிர்வாகம், ஊழலற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது. எங்களுக்கு எட்டியவரை, ஊழலுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை, அவர் மேற்கொண்டார். பொது சேவையில், ஊழலற்ற அதிகாரி என்ற அளவுக்கு, முன்மாதிரியாக விளங்குகிறார்.
குறை சொல்ல முடியாத துணை வேந்தர் மீது, ஊழல் புகார் கூறி, விசாரணையை அறிவித்திருப்பது, பேராசிரியர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.அரசின் இந்த நடவடிக்கை, சர்வதேச அளவில் புகழ் பெற்ற, அண்ணா பல்கலையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும். பேராசிரியர்களை பொறுத்தவரை, சுரப்பா மீது முழு நம்பிக்கை வைத்துள்ளோம். அவர் மீது கூறப்படும் புகார்கள் அடிப்படை ஆதாரமற்றவை. எனவே, விசாரணை உத்தரவை, அரசு ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE