கு.அருணாச்சலமூர்த்தி,
புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம்
நாட்டில் மருத்துவர், ஆசிரியர், போலீசார் என, அனைத்து துறைகளிலும், போலி
நபர்கள் உள்ளனர். அவர்களை ஒழிக்கவே முடியவில்லை.
வழக்கறிஞர் படித்ததாக
போலியாக பட்டங்கள் வாங்கி, அதன் மூலம் நீதித்துறையில் நடுவர்களாக அமர்ந்த
சிலரை, தமிழக பார் கவுன்சில் கண்டறிந்து, அவர்களின் வழக்கறிஞர் உரிமத்தை
ரத்து செய்துள்ளது. இன்னும் மாட்டாத போலிகள் எத்தனையோ!
தற்போது, மதுரை உயர்
நீதிமன்ற நீதிபதிகள், 'வாகனங்களில், 'வழக்கறிஞர்' எனும், 'ஸ்டிக்கர்'
ஒட்டுவதற்கு, ஏன் தடை விதிக்கக் கூடாது?' பார் கவுன்சிலுக்கு கேள்வி
எழுப்பி உள்ளனர்; அது நியாயமான கேள்வி.அதேபோல, நீதித் துறை ஊழியர்களில்
பெரும்பான்மையோர், தங்களது இருசக்கர வாகனம் மற்றும் கார்களில், 'நீதித்
துறை' என்றும்; காவல் துறை அதிகாரிகள் பலர், 'போலீஸ்' என்றும் ஸ்டிக்கர்
ஒட்டிக் கொள்கின்றனர்.
அரசு ஊழியர்கள், தங்களது வாகனத்தில், சம்பந்தப்பட்ட
துறையை குறிப்பிட்டு, ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொள்கின்றனர். இவை,
அனைத்திற்கும் ஏன் தடை விதிக்க கூடாது?மேலும், அரசியல் கட்சியினர், 99
சதவீதம் பேர், தங்களது கட்சி தலைவரின் படம், கொடி, சின்னம் ஆகியவற்றை,
வாகனங்களில் ஸ்டிக்கர்களாக ஒட்டிச் செல்கின்றனர். இந்த செயலுக்கும், தடை
விதிக்க வேண்டும்.அனைத்து துறைகளிலும், கருப்பு ஆடுகள் எங்கும் நீக்கமற
கலந்து விட்டது உண்மையே.
எனவே, வழக்கறிஞர் மட்டும் அல்ல, மோட்டார் வாகன
சட்டப்படி, யாரும் எந்த ஒரு குறிப்பிட்ட அடையாள ஸ்டிக்கரையும் ஒட்ட
வேண்டாம் என, உத்தரவு பிறப்பிப்பது தான், சரியான தீர்வாக
இருக்கும்.நீதிபதிகள், முதற்கட்டமாக தங்களது நீதித் துறையில் பணிபுரிவோர்,
எந்த ஒரு அடையாள ஸ்டிக்கரையும் ஒட்டக் கூடாது என, உத்தரவு பிறப்பிக்க
வேண்டும்.பொதுவாக, ஸ்டிக்கர் ஒட்டுவது, அவர்கள் சட்டத்திற்கு
அப்பாற்பட்டோர் என, நினைக்க வைப்பதற்கு தானே! ஜனநாயக நாட்டில், அப்படி
யாரும் இருக்கக் கூடாது.
இயற்கையை போற்றுவோம்!
மாரி ஜெயக்கொடி, சந்தையூர், மதுரை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: நம்மிடம் ஏராளமான வளமும், முன்னோர் கற்றுக் கொடுத்த அறிவும் உள்ளது. அதை பயன்படுத்தாமல் இருக்கிறோம் என்பதை, சமீபத்தில் அறிந்தேன்.நான், 3 ஏக்கரில் வெள்ளைச் சோளம் மானாவாரியாக பயிரிட்டு இருந்தேன்.
கதிர்விடும் பருவத்தில், குறுந்துப்பூச்சி தாக்கம் அதிகம் இருந்தது.இதனால், குறுத்து புழுவை அழிக்க, ரசாயன மருந்துக்கு எவ்வளவு செலவாகும் என, மருந்து கடையில் விசாரித்தேன். மருந்து, 1,500 ரூபாய், தெளிக்க, 500 ரூபாய் என, மொத்தம், 2,000 ரூபாய் செலவாகும் எனத் தெரிய வந்தது.என்னிடம், பணம் இல்லை.
இந்நிலையில், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கூறியுள்ள, ஆலோசனைப்படி செயல்பட முடிவெடுத்தேன்; அதாவது, இயற்கை மருந்து தயாரித்தேன்.வேப்ப இலை, 3 கிலோ; இஞ்சி, பூண்டு, மஞ்சள் துாள், மிளகு, தலா, 100 கிராம், கச்சகுமுட்டிகாய், 500 கிராம் ஆகியவற்றை, தயிர் மற்றும் மாட்டின் சிறுநீர் கலந்து அரைத்தேன். அந்த மருந்தை, சோளப் பயிரில் தெளித்தேன்.
குறுத்து புழு செத்து, புதிய குறுத்து, நான்காவது நாளிலேயே வெளியே தெரிந்தது. ஏழாவது நாளில், சோளப்பயிர் பச்சை பசேலென்று பார்க்க அழகாக இருக்கிறது. தற்போது கதிர்விட்டது. என்னால் நம்பவே முடியவில்லை. இயற்கை மருந்து தயாரிக்க, 100 ரூபாய் தான் செலவானது. ரசாயன மருந்து மீது இருந்த மோகத்தால், நம் பாரம்பரியமான, எளிமையான மருத்துவத்தை புறக்கணித்து விட்டோம்.
இம்மண்ணுக்கு, ரசாயனம் எதிரி; ஆனால், இயற்கை உரமும், மருந்தும், மண்ணிற்கு வளம் சேர்க்கிறது.ரசாயனம் உரம், மருந்து மண்ணுக்கு எதிரி; இயற்கை உரம் மருந்து மண்ணுக்கு வளம்.முன்னோர் பல நல்ல விஷயங்களை, நமக்கு சொல்லிக் கொடுத்துள்ளனர். அதை, 'பழமை' என, உதாசீனப்படுத்தாதீர்; பழமை தான், சால சிறந்தது!l
கல்வியாண்டை மாற்றலாமே!
செல்வராஜ், ஓய்வு பெற்ற ஆசிரியர், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பள்ளி திறக்காமலேயே, இக்கல்வியாண்டு நிறைவு பெறும் நிலையில் உள்ளது.'கொரோனா' தொற்று நோய் பரவல் காரணமாக, பள்ளி எப்போது திறக்கப்படும் என்பதில், தொடர்ந்து விவாதம் நடந்து வருகிறது.'மாணவரின் கல்வியில் தேக்க நிலை இருக்கக் கூடாது.
எனவே, போதிய முன்னெச்சரிக்கையுடன், பள்ளி திறக்கப்பட வேண்டும்' என, ஒருபுறமும்; 'குழந்தைகளின் உயிர் மீது விளையாடக் கூடாது. கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை, பள்ளி திறக்க வேண்டாம்' என, மறுபுறமும் விவாதம் நடக்கிறது.'ஆன்லைன்' மற்றும் 'டிவி' வழியே கல்வி கற்பித்தல் என்பது, முழுமையாக சாத்தியமாகவில்லை. பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், சில மாதங்களாக, கல்வி கற்றலில் இருந்து விலகியே உள்ளனர்.
ஏழை மாணவர்கள் விவசாயம், மீன் பிடித்தல், வியாபாரம் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.கல்வி கற்றலில் இருந்து விலகி, வேலையில் ஈடுபடும் சிறார்களின் எதிர்காலம், கேள்விக்குறியாக மாறியுள்ளது.ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில், பள்ளி திறக்கப்பட்ட பின், கொரோனா நோய் தொற்று அதிகரித்து இருக்கிறது.
மீன் மார்க்கெட், ஷாப்பிங் என, எங்கு பார்த்தாலும் கூட்டம் இருக்கிறது. பண்டிகை காலம் என்பதால், மக்களின் அலட்சியத்தால், நோய் பரவல் மேலும் அதிகரிக்கும்.இந்நிலையில், பள்ளி திறப்பு என்பது, ஆபத்தை விளைவிக்கும்.
எனவே, இக்கல்வியாண்டினை மாற்றி, கொரோனா தாக்கம் ஓய்ந்தபின், 2021 - 2022 கல்வியாண்டாக அறிவிக்க வேண்டும்.அதாவது, 2020 - 2021ல், எட்டாம் வகுப்பு படிக்க வேண்டிய மாணவர், 2021 - 2022 கல்வியாண்டில், அதே வகுப்பு படிக்க வேண்டும். இதனால், கற்றல் நிலையில் தேக்கம் உருவாகாது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE