நாயர், சூடான இஞ்சி டீயை, நண்பர்களுக்கு கொடுத்தார்.
''கஞ்சா கடத்தல் கனஜோரா நடக்குதாம் பா...'' என, டீயை உறிஞ்சியபடியே, முதல் தகவலுக்கு வந்தார், அன்வர்பாய்.
''என்னன்னு விளக்கமா சொல்லும் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பக்கத்துல இருக்குற, பண்ணவயல் கிராமத்துல, சமீபத்தில், 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 140 கிலோ கஞ்சாவை, கியூ பிரிவு போலீசார் பறிமுதல் பண்ணினாங்க பா...
''இந்த கஞ்சா கடத்தல் வழக்கை, சாதாரணமா மூடி மறைக்க, போலீசார் முயற்சி பண்ணுறாங்களாம்... கடற்கரை ஓரமா இருக்கற, முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் வழியாகத் தான், கஞ்சா கடத்தல் நடக்குதாம் பா...
''மாதம்தோறும், பல கோடி ரூபாய் மதிப்பு உள்ள, கஞ்சா கடத்தல் நடக்குதாம்... எல்லாம் தெரிஞ்சும், கமிஷன் சரியா வர்றதால, போலீசார், 'கம்'முன்னு இருக்குறதா பேசிக்கிறாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
''அந்த நகைக்கடையில, திருட்டு நகை குவியுதாம் வே...'' என்றபடியே, அடுத்த தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.
''என்னன்னு விளக்கமா சொல்லுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''திருச்சி அருகே ராம்ஜி நகரில் இருக்குற சிலர், நாடு முழுதும் கும்பலா போய், கொள்ளை அடிக்காவ...
''கொள்ளையடிச்சுட்டு வர்ற நகையை, அங்கே இருக்குற குறிப்பிட்ட அடகு கடையில, 'வெங்கடாச்சலம்' என்ற பெயருல தான் விற்காவ வே...
''திருட்டு வழக்குல, பொருட்களை மீட்க வரும் போலீசார், இந்த நகைக்கடைக்கு அடிக்கடி போய், நகையை மீட்பாவ... ஆனால், நகைக்கடைக்காரர் மீது, இதுவரை எந்த வழக்கும் போட்டதில்லை வே...'
'இந்த நகைக்கடையில் மட்டும், கிலோ கணக்குல திருட்டு நகை இருக்காம்... யாராவது, நடவடிக்கை எடுப்பாங்களான்னு, உள்ளூர் மக்கள் எதிர்பார்க்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''மணப்பாறையில, நடிகர் போட்டியிட போறாராம் ஓய்...'' என, கடைசித் தகவலுக்கு மாறினார், குப்பண்ணா.
''எந்த நடிகர், என்ன விஷயமுன்னு சொல்லுங்க பா...'' எனக் கேட்டார், அன்வர் பாய்.
''திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள, பன்னாம்கொம்பு கிராமத்தைச் சேர்ந்தவர், நடிகர் விமல்... இவரு, களவாணி, வாகை சூடவா உள்ளிட்ட படங்கள்ல நடிச்சிருக்கார் ஓய்...
''நடிகர் என்பதாலும், ஜாதி ரீதியாகவும் விமலை, தி.மு.க., சார்பில், மணப்பாறை தொகுதியில போட்டியிட வைக்கப் போறா...
''இது சம்பந்தமா, தி.மு.க., இளைஞரணி செயலரான உதயநிதி மற்றும் அவரின் நண்பர், மகேஷ் பொய்யாமொழியை சந்திச்சுப் பேசி இருக்கார் ஓய்...'' என முடித்தார் குப்பண்ணா.''தி.மு.க.,வுல இது தான் பிரச்னையே... கட்சிக்காக, காலங்காலமா போஸ்டர் ஒட்டுற அடிமட்ட தொண்டனுக்கு, எந்த மதிப்பும் கொடுக்க மாட்டாங்க...'' என, அந்தோணிசாமி சொல்லவும், நண்பர்கள் அதை ஆமோதித்தபடியே இடத்தை காலி செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE