இன்றைய மனித வாழ்க்கையில் காண்பதற்கு அரிதான ஓர் அரிய பண்பு அர்ப்பணிப்பு உணர்வாகும். இவ்வுணர்வு ஒருவரின் மனப்பான்மையைச் சார்ந்தது. ஒருவர் தன்னைப் பொருத்தவரை மிக முக்கியமானது என்று எதைக் கருதுகிறாரோ அதற்காகத் தன் முழுத் திறமையையும் உழைப்பினையும் நேரத்தினையும் செலவழிப்பதே அர்ப்பணிப்பு உணர்வு எனப்படும்.வாழ்க்கையில் பெரிய வெற்றிகளை அடைந்து பிறருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்கள் அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டவர்கள்தாம். நாம் இவர்களிடமிருந்து எதையாவது கற்றுக்கொண்டோமா என்று நமக்குள் நாமே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்பதுதான் கசப்பான உண்மை
விளைவுகள் என்ன
அன்றாட வாழ்வில் நாம் அர்ப்பணிப்பு உணர்வைக் கிட்டத் தட்டக் கைவிட்டு விட்டோம் என்றே கூறத் தோன்றுகிறது. வீட்டில் நாம் தினசரி பயன்படுத்தும் மின்சாரக் கருவிகள் பழுதடைகிறபோது அவற்றை ஒருவர் சரிசெய்த பின்னரும் மீண்டும் இன்னொருவரை அழைத்துச் சரிசெய்ய வேண்டியிருக்கிறது.
ஒரு பல்கலைக்கழகத்தின் தேர்வுகளை ஆயிரக்கணக்கான மாணவர்கள் எழுதும் போது அதில் ஒரு பகுதி விடைத்தாள்கள் காணாமல் போய், மீண்டும் கண்டுபிடிக்கப்படுகின்றன. இது எவ்வாறு ஏற்படுகின்றது.தேர்வு மதிப்பெண்கள் வழங்கப் பட்ட பின்னர் ஒரு மாணவி தனக்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பெண்கள் குறைவு என்று அதிர்ச்சியடைந்து மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்து அதிக மதிப்பெண்கள் பெறுகிறாள்; இது ஏன். இக்குறைபாடுகள் எல்லாமே சம்பந்தப்பட்ட மனிதர்களின் அர்ப்பணிப்பு உணர்வு, குறைவதால் ஏற்படும் விளைவுகள் என்பதைத் தவிர வேறென்ன
தாயின் அர்ப்பணிப்பு
நம்மை ஈன்றெடுத்த பெற்றோரின் அர்ப்பணிப்பினால் அல்லவா நாம் வளர்ந்தோம் கண்ணதாசன் தாயின் அர்ப்பணிப்பு உணர்வைப் பெருமைப்படுத்தும் முறையில்,
'பசித்த முகம் பார்த்து,
பதறும் நிலை பார்த்து பழம் தரும் சோலை அது
இருக்கும் பிடிசோறு தனக்கென எண்ணாமல்
கொடுக்கின்ற கோயில் அது'
என்று பாடுகிறார்.
எந்த யுகத்திலும் மாறாத அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும் ஆத்மா நமது தாய்தான்.
அர்ப்பணிப்பு உணர்வு உடையவர்களைக் குமரகுருபரர் “கருமமே கண்ணாயினார்” என்று கூறுகிறார். அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுபவர்கள் எந்த ஒரு பெரிய கூட்டத்திலும் தனித்துத்தோன்றுவர். ஒரு மாணவராக இருந்தால் அதிக நேரம் எடுத்துக் கொண்டும் புதிதாகவும் படிப்பார்; ஒரு வணிகராக இருந்தால் அதிக நேரம் உழைப்பதுடன் புதிய புதிய உத்திகளைக் கையாண்டும் வணிகத்தைப் பெருக்குவார் ; அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைப்பவர்கள் தங்களின் முந்தைய சாதனைகளைத் தாங்களே முறியடிப்பவர்களாக இருப்பார்கள். இவர்கள்தான் 'கருமமே கண்ணாயினார்'. குமர குருபரரின் நீதிநெறி விளக்கப் பாடல் இவர்களைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறது:
“மெய்வருத்தம் பாரார்,
பசி நோக்கார், கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும்
மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார்
அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணா யினார்”
எட்டு பண்புகள்
அர்ப்பணிப்பு உணர்வு பற்றி ஆய்வு செய்த மேனாட்டு அறிஞர்கள் அர்ப்பணிப்பு உணர்வு மிகுந்த மனிதர்களிடம் எட்டு இன்றியமையாத பண்புகள் இருப்பதை இனங் கண்டு கூறியுள்ளனர்.
1. எளிதில் உணர்ச்சி வசப்படும் தன்மையினால் கடினமான செயல்களைச் செய்து முடிப்பார்கள்.
2.வெற்றிக்கான திட்டத்தை வகுத்து முழு மனத்துடன் ஈடுபடுவார்கள்.
3.தங்கள் மீது அதீத நம்பிக்கை கொண்டு கடினமான செயல்களையும் செய்வார்கள்.
4. தகுந்த திட்டத்துடனும் செல்ல வேண்டிய திசையறிந்தும் செயல்படுவார்கள்.
5.சூழ்நிலைகளுக்கு ஏற்பத் தங்களை மாற்றிக் ொள்ளும் திறமைஉடையவர்களாக இருப்பார்கள்.
6. சுய கட்டுப்பாடு மிக உடையவர்கள். தங்கள் குறிக்கோளை விட்டு விலகாமல் இருப்பர்.
7.தங்களின் பணிகள் குறித்துச் சிந்தித்துக்கொண்டே இருப்பார்கள்; பணிகள் குறித்து மற்றவர்களுடன் உரையாடுவார்கள்.
8. மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் உந்துதலாகவும் திகழ்வார்கள்.
இலக்கியம் சொல்வது
அர்ப்பணிப்பு உணர்வு பற்றிய நவீன ஆய்வுகள் ஒருபுறம் இருக்க, நமது தொன்மையான இலக்கியங்கள் கூறுவது வியப்பாக இருக்கிறது. தான் பிறந்த குடி முன்னேற வேண்டும் என்று உழைப்பவனுக்குத் தெய்வமே முன்வந்து உதவும் என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.
“குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான் முந்துறும்”என்று வள்ளுவர் கூறுகிறார்.
அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுபவர்கள் எதனையும் திட்டமிட்டு தொடங்குவார்கள்.
இதனையே திருவள்ளுவர்
'சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது”என்று கூறுகிறார்.
நன்கு ஆராய்ந்து முடிவு செய்தவுடன் காலந்தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும் என்று வள்ளுவர் கூறுவதானது இன்றைய ஆய்வுகளை விட ஒரு படி மேலானதாகும்.
ஒரு கதை
அர்ப்பணிப்பு உணர்வின் சிறப்பை விளக்க ஒரு கதை. தொழிலாளர்கள் இரண்டு பேர் காலை முதல் மாலை வரை விறகு உடைக்கிறார்கள். நடுப்பகலில் சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் பணியில் ஈடுபடுகின்றனர். மாலையில் பணி முடிந்த போது ஒருவர் அதிக அளவில் விறகை உடைத்திருந்தார். கடைக்காரர் அவர்களிடம் “நீங்கள் இருவரும் சமமாகத் தோன்றுகின்றீர்கள்; எப்படி ஒருவரால் மட்டும் அதிக அளவு விறகை உடைக்க முடிந்தது” என்று கேட்டார்.
“இருவரும் சமமாகத்தான் வேலை செய்தோம்; மதிய ஓய்வின் போது அவர் சிறிது நேரம் துாங்கினார். நான் விறகு உடைக்கப் பயன்படும் கோடரியைக் கூர்மைப்படுத்திக் கொண்டிருந்தேன்; அதனால் என்னால் சிரமமின்றி விறகை உடைக்க முடிந்தது; அவரது கோடரி கூர்மை மழுங்கியிருந்ததால் அதிகளவு விறகை உடைக்க முடியவில்லை, இதுதான் காரணம்” என்று பதில் கூறினார்.
அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவதால் ஏற்படும் நன்மை இதுதான்.உலகப் போர்களால் சிதைவுண்ட, இயற்கைப் பேரழிவால் அழிந்த நாடுகளின் மக்கள் மீண்டும் தங்களை நிலைப்படுத்திக் கொள்ளக் கடுமையாக உழைத்த வரலாற்றை நாம் அறிவோம்.
“என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்
ஏன் கையை எந்த வேண்டும்வெளிநாட்டில்'
என்ற பாடல் வரிகளை எத்தனை முறை கேட்டிருப்போம்! திருந்தினோமா.. சென்ற காலத்தின் சிறப்பையும் இன்று நாடு இருக்கும் நிலையையும் எண்ணிப் பார்த்தாவது அர்ப்பணிப்பு உணர்வைக் கைக்கொள்வோம்.
-முனைவர் ம.திருமலை,
முன்னாள்துணைவேந்தர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
76399 33367
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE