திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் உயர்மட்ட பாலத்தின் சீரமைப்பு பணி நிறைவடையும் நிலையில் விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயர்மட்ட பாலம், 60 ஆண்டுகள் ஆகியும் கடகால் பகுதி உறுதியுடன் இருக்கும் நிலையில், லேசாக பழுதடைந்து இருக்கும் ஓடுதள மேற்பரப்பை சீரமைப்பது, பாலத்தை சமன்படுத்தி பேரிங் பொருத்தி, மூன்று கட்டைகளின் கடகால் பகுதியை பலப்படுத்தும் பணி 2.30 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.இதற்காக தரைப்பாலம் சீரமைக்கப்பட்டு மாற்று பாதையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தரைப்பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு சுவர் இல்லை, மின் வசதி இல்லை. அதிகரித்து விட்ட போக்குவரத்தின் காரணமாக இப்பாதையில் விபத்துகள் ஏற்படுகிறது.
அத்துடன் பருவமழை தீவிரமடைந்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு துவங்கினால், தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்படும்.அப்போது தபோவனம் அருகே இருக்கும் உயர்மட்ட பாலத்தை பயன்படுத்த வேண்டிய கட்டாய சூழல் ஏற்படும். இதற்காக 7 கிலோமீட்டர் தூரம் சுற்றி திருக்கோயிலூர்வர வேண்டிய நிலை ஏற்படும். உயர்மட்ட பாலத்தின் 80 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்ட நிலையில், எஞ்சி இருக்கும் 20 சதவீத பணியை விரைந்து முடித்து போக்குவரத்திற்கு பாலத்தை திறக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. நெடுஞ்சாலைத்துறை இதனை கருத்தில் கொண்டு பாலப்பணியை போர்க்கால அடிப்படையில் நிறைவு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE