திருப்போரூர் : திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில், நேற்று, கொடியேற்றப்பட்டது.
திருப்போரூரில் பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவிலில், ஆண்டு தோறும், கந்த சஷ்டி விழா, வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு, கொரோனா காரணமாக, இவ்விழா ரத்து செய்யப்பட்டது.ஆனால், கொடியேற்றம், சுவாமி உள்புறப்பாடு உள்ளிட்ட நிகழ்வுகள் மட்டும் நடைபெறும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்தது.அதன்படி, பக்தர்களுக்கு நேற்று, அனுமதி அளிக்கப்படவில்லை. சிவாச்சாரியார்கள் முன்னிலையில் மட்டும், கொடியேற்று விழா நடந்தது.
அதிகாலை, 5:00 மணிக்கு, கோவில் வட்ட மண்டபத்தில், உற்சவர் கந்தசுவாமி பெருமான், சிறப்பு அலங்காரத்தில், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார்.பின், கொடி மரம், கொடிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை காட்டப்பட்டன. தொடர்ந்து, 'கந்தா... சரவணா... அரோகரா...' கோஷத்துடன், உற்சவ கொடி ஏற்றப்பட்டது.பக்தர்கள், கோவில் கேட்டின் வெளியே, 16 கால மண்டபம் உட்பட வெளிப்புற வளாகத்தில் நின்று, சமூக இடைவெளி கடைப்பிடித்து, சுவாமியை வழிபட்டனர்.அதேபோல்,காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி உற்சவத்தை முன்னிட்டு, நேற்று காலை, 6:30 மணிக்கு, கொடி ஏற்றப்பட்டது.தொடர்ந்து முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன், கோவில் உள் வளாகத்தில் புறப்பாடு நடைபெற்றது. பக்தர்கள், வளாகத்தை சுற்றிவர தடைவிதிக்கப்பட்டு உள்ளது.கோவிலில் சிறப்பு அர்ச்சனை கிடையாது. காலை, 8:00 மணி முதல் காலை, -11:30 வரையிலும், மாலை, 5:00 முதல் -8:00 மணி வரை, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.அதற்கான அறிவிப்பு பலகையும், கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE