திருநீர்மலை : திருநீர்மலையில் உள்ள ரங்கநாத பெருமாளை தரிசிக்க, சாலை வசதியை ஏற்படுத்த, தொல்லியல் துறை அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், திவ்ய தேசங்களில், 61வது திவ்ய தேசமாகும். இக்கோவிலில், நின்ற, கிடந்த, நடந்த, அமர்ந்த ஆகிய நான்கு கோலங்களில், பெருமாள் அருள்பாலிக்கிறார்.பெருமாள் நின்ற கோலத்தில், மலையின் அடிவாரத்திலும், மேற்பகுதியில் மற்ற மூன்று கோலங்களிலும் அருள்பாலிக்கிறார். இக்கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக, புரட்டாசி மாதம் மற்றும் சனிக்கிழமைகளில், பக்தர்களின் கூட்டம் எதிர்பார்த்ததை விட அதிகமாக காணப்படும்.
பக்தர்கள், மலை அடிவாரத்தில் உள்ள நீர்வண்ண பெருமாளை தரிசித்த பின், மலையின் மேல் உள்ள சன்னதிகளை தரிசிக்க, படிக்கெட்டு வழியாக செல்ல வேண்டியுள்ளது.இதனால், முதியோர், மாற்றுத் திறனாளிகள் மலையின் மீது ஏறி, சுவாமியை தரிசிக்க முடியவில்லை. மலை அடிவாரத்திலேயே தரிசனம் செய்துவிட்டு, சென்று விடுகின்றனர். வேண்டுதலை நிறைவேற்ற வேண்டியவர்கள், சிரமப்பட்டு படிக்கெட்டு ஏறுகின்றனர். இதனால், மலை அடிவாரத்தில் இருந்து மேல் பகுதிக்கு செல்ல, சாலை வசதியை ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை இருந்து வருகிறது.
ஆனால், கோவில் அமைந்துள்ள மலை, தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், பக்தர்களின் கோரிக்கையை, இந்து அறநிலையத்துறையால் நிறைவேற்ற முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, பக்தர்களின் வசதிக்காக, சாலை வசதியை ஏற்படுத்த, தொல்லியல் துறை அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும் என, பக்தர்களும், கோவில் நிர்வாகத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE