துரைப்பாக்கம் : இணையத்தில், 'செய்தி வாசிப்பாளர் தேவை' என விளம்பரப்படுத்தி, நம்பி வந்த பெண்ணுக்கு, 'மேக் அப்' ஒத்திகை நடத்தி, அவரது நகை திருடிய தம்பதியை, போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், பரக்காவட்டுவிளையை சேர்ந்தவர் மினிமோள், 27. இவர், இருதினங்களுக்குமுன், அடையாறு, காவல் துணை ஆணையரிடம் ஒரு புகார் அளித்தார்.4 சவரன் நகைஅதில், 'நான் செய்தி வாசிப்பாளர் பணி தேடி, 10 நாட்களுக்கு முன், சென்னை வந்தேன். கிண்டியில் உள்ள, தோழி வீட்டில் வசிக்கிறேன்.இணையத்தில், ஓ.எல்.எக்ஸ்., பகுதியில், 'செய்தி வாசிப்பாளர் தேவை' என்ற விளம்பரத்தை பார்த்து, அதில் குறிப்பிட்ட மொபைல் போனில் தொடர்பு கொண்டேன். மறு முனையில் பேசிய பெண், நேர்முக தேர்வு, 'மேக் அப்' ஒத்திகை நடத்த வேண்டும் எனக் கூறி, துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்து சென்றார்.
அங்கு, அவரது கணவன் இருந்தார். மேக்கப் ஒத்திகை பாவனை காட்டி, நான் அணிந்திருந்த, 4 சவரன் நகையை கழற்றி வைக்க கூறினர். நான் கழிப்பறை சென்ற நேரத்தில், நகையை திருடிய இருவரும் மாயமாகினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, நகையை மீட்டுதர வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.தனிப்படை போலீசார், தங்கும் விடுதி கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர். பாலவாக்கத்தைச் சேர்ந்த ராபின் பிஸ்ட்ரோ, 30, தீபா, 38, என தெரிந்தது. நேற்று முன்தினம் இருவரையும் கைது செய்து, நகையை மீட்டனர்.
இணையத் தளம் : இது குறித்து, போலீசார் கூறியதாவது:தீபாவுக்கு, திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளன. கணவரை பிரிந்து, ராபின் பிஸ்ட்ரோவை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். எட்டு ஆண்டுக்குமுன், தீபா, ஊர்க்காவல் படையில் பணி புரிந்தார். சில மாதமாக, இருவரும் சேர்ந்து, ஓ.எல்.எக்ஸ்.,சில் விளம்பரம் செய்து, வீட்டு வேலைக்கு ஆள்சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு, அதே இணையத்தை தவறான வழியில் பயன்படுத்த முடிவு செய்தனர்.
இதற்காக, படம் நடிக்க நடிகர் - நடிகை தேவை, வரவேற்பாளர், செய்தி வாசிப்பாளர் தேவை என விளம்பரப்படுத்தி, நம்பி வருவோரிடம் பணம் பறித்து வந்தனர்.பத்துக்கும் மேற்பட்டோரை ஏமாற்றி உள்ளனர். பொதுமக்கள், இணைய தளத்தில் வரும் விளம்பரங்களை, நன்கு விசாரித்து அணுகவும்.பெண்கள், இதுபோன்ற இடங்களுக்கு செல்லும்போது, பாதுகாப்புக்கு உறவினர்கள், தோழிகளை அழைத்து செல்ல வேண்டும்.இவ்வாறு, போலீசார் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE