மதுரை : “ஆதரவாளர்களின் கருத்து கேட்கப்பட்ட பின் புதிய கட்சி துவங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும்” என முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தெரிவித்தார்.
தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட பின் தமிழகத்தில் லோக்சபா, சட்டசபை தேர்தல் நேரத்தில் அக்கட்சியை பலவீனப்படுத்தும் வகையில் பேட்டி, அறிக்கை கொடுத்து திணறடித்தார் அழகிரி.
'பா.ஜ.,வில் இணைகிறார், ரஜினி கட்சி துவக்கினால் அவருடன் சேரும் எண்ணத்தில் உள்ளார், அவரது மகன் தயாநிதி பா.ஜ.,வில் இணைகிறார், ஜனவரியில் புதிய கட்சியை துவங்க உள்ளார் அழகிரி…' என வதந்திகள் அரசியல்வட்டாரம் மற்றும் சமூக வலைதளங்களில் அடிக்கடி வலம் வந்து தி.மு.க.,வை கலங்கடித்து வருகின்றன.

'தேர்தலில் தென் மாவட்டங்களில் நமது பலத்தை தி.மு.க.,விற்கு மீண்டும் நிரூபிக்க வேண்டும். உங்களை (அழகிரியை) ஸ்டாலின் வழக்கம்போல் கண்டுகொள்ளாவிட்டால் கருணாநிதி தி.மு.க., என்ற பெயரில் புதிய கட்சி துவங்கி, ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி மீது அதிருப்தியில் உள்ள தலைவர்கள், நிர்வாகிகளை ஒன்றிணைத்து மீண்டும் ஸ்டாலினுக்கு பாடம் புகட்ட வேண்டும். விரைவில் முடிவு எடுங்கள்' என அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரையில் உள்ள அழகிரி நமது நிருபரிடம் கூறியதாவது: ஆதரவாளர்கள் தொடர்ந்து என்னிடம் பேசிவருவது உண்மை தான். அதிருப்தி தலைவர்கள் சிலரும் தொடர்பில் உள்ளனர். பா.ஜ.,வில் சேருவேன் என்பதெல்லாம் உண்மை இல்லை. ஆதரவாளர்களின் உணர்வுகளை மதித்து, கருத்தை கேட்டு புதிய கட்சி துவங்குவதா இல்லையா என முடிவு எடுப்பேன். வேறு எதுவும் இப்போது சொல்ல மாட்டேன், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE