அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுரப்பா மீது கூறப்படும் ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்க, தமிழக அரசு விசாரணை அமைப்பை நிறுவியுள்ளது. அதனால் அவர் தொடர்ந்து பதவியில் நீடிக்கக் கூடாது.
- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்
'தமிழக தலைவர்கள் தங்கள் மீதான வழக்குகள், விசாரணை கமிஷன்களுக்கு, பதவி விலகி இருந்தால், சுரப்பாவும் விலகி இருப்பார்...' என, சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை.
கண்ணுக்குத் தெரியாத அரக்கனான, கொரோனாவை எப்போது இந்த உலகை விட்டு விரட்டுகிறோமோ அப்போது தான், மக்களுக்கு உண்மையான தீபாவளி. கொரோனா துயரங்கள் நீங்கி, வளம் பெறுவோம்.
- த.மா.கா., தலைவர் வாசன்
'உண்மை தான். இப்போது கொண்டாடி முடித்துள்ளது, 'டிரெய்லர்!' மெயின் பிக்சர், கொரோனா முடிந்த பிறகு தான்...' என, சொல்லத் தோன்றும் வகையில், த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை.
தமிழகத்தில் கல்வித் துறையில், காவிகளின் தலையீடு, ஆபத்தான நிலையை ஏற்படுத்தி விடும். இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
- ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ
'காவிகளின் ஆட்சியில், காவித் தலையீடு இருக்கத் தானே செய்யும்...' என, கூறத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை.
துாத்துக்குடிக்கு முதல்வர் இ.பி.எஸ்., சென்ற போது, செல்லும் வழியில், வலுக்கட்டாயமாக கடைகளை மூடச் செய்துள்ளனர். கறுப்புக்கொடி காட்டி விடுவர் என்பதற்காக மூடச் சொன்னரா அல்லது 'கோபேக்' கோஷத்துக்கு பயந்தா என்பது தெரியவில்லை.
- தி.மு.க., தலைவர் ஸ்டாலின்

'துாத்துக்குடி மக்கள், முதல்வருக்கு இயல்பான, சிறப்பான முறையில் வரவேற்பு கொடுத்தனர். நீங்கள் சொல்வது போல நடக்கவில்லையே...' என, பதிலடி கொடுக்கத் தோன்றும் வகையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேச்சு.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் முதுநிலை பட்டப் படிப்பு பாடத் திட்டத்திலிருந்து, எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய, 'வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்' என்ற நுாலை நீக்கியிருப்பது பல்கலைக்கழக சுதந்திரத்தின் மீதான தாக்குதல். அதை அனுமதிக்க முடியாது.
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம்
'நீங்கள் அனுமதிக்க தேவையில்லை; பல்கலைக்கழகம், தீர்க்கமாக ஆராய்ந்து தான், நல்ல முடிவை எடுத்துள்ளது...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் அறிக்கை.
மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஓவைசியும், அவர் சகோதரர் அக்பரூதீனும், பா.ஜ.,-வின் எடுபிடியாக செயல்படுகின்றனர். மருத்துவ கல்லுாரிகள் உள்ளிட்ட, 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை காப்பாற்றிக் கொள்வதற்காக இருவரும், அப்பாவி முஸ்லிம்களை தவறாக வழிநடத்திச் செல்கின்றனர்.
- உருது கவிஞர் முன்னா வர்ராணா
'முஸ்லிம்களின் ஒப்பற்ற தலைவர் என ஓவைசியை பலரும் புகழ்கின்றனரே...' என, சொல்லத் தோன்றும் வகையில், உருது கவிஞர் முன்னா வர்ராணா அறிக்கை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE