சேலம்: வன உயிரியல் பூங்காவை, 2,142 பேர் கண்டுகளித்தனர். சேலம், குரும்பப்பட்டி வன உயிரியில் பூங்காவுக்கு, சுற்றுலா பயணியர், நேற்று காலை, 9:00 மணி முதல், குடும்பம் சகிதமாக திரண்டு வந்தனர். 100 ?ஹக்டேரில், விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பூங்காவை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். வெள்ளை மயில், சாம்பல் கூழைக்கடா, நாரை, மஞ்சள்மூக்கு நாரை, கவுதாரி, காக்டெயில், செவ்வளைய கிளி, அலெக்சாண்டர் கிளி, லவ்பேர்ட்ஸ் போன்ற பறவைகளின் ஆர்ப்பரிப்பு குழந்தைகளை மகிழ்விக்க செய்தது. புள்ளிமான், செம்முக குரங்கு, லங்கூர் குரங்கு, வங்கா நரி, குள்ளநரி, முதலை, நட்சத்திர ஆமை, உடும்பு, மலைப்பாம்பு, புதிதாக வரப்பெற்ற மூன்று மர நாய்கள் ஆகியன, எல்லோரையும் கவர்ந்தது. செயற்கை நீரூற்று, தத்ரூப விலங்கு பொம்மை, பசுமை புல்வெளி, வண்ணத்து பூச்சி பூங்கா, குழந்தைகள் பூங்கா, அல்லி, தாமரைக்குளம் ஆகியன, அனைவரையும் குதூகலிக்க செய்தன. இதனால், மாலை, 5:00 மணி வரை, சுற்றுலா பயணியர் கூட்டம் குறைந்தபாடில்லை. சிறுவர், 257 பேர்; பெரியவர், 1,885 பேர், ஒரே நாளில், பூங்காவை கண்டு ரசித்தனர். அவர்கள் மூலம், 30 ஆயிரத்து, 150 ரூபாய் வருவாய் கிடைத்தது. இதில், கேமரா, வாகன நிறுத்த கட்டணம் அடங்கும். தீபாவளி நாளில், 1,134 பேர் வந்ததால், 17 ஆயிரத்து, 95 ரூபாய் வருவாய் கிடைத்தது. பூங்கா வனச்சரகர் முரளி கூறுகையில், ''கடந்தாண்டு தீபாவளிக்கு மறுநாள், 87 ஆயிரத்து, 400 ரூபாய் வருமானம் கிடைத்தது. பூங்கா திறந்த பின், வசூலான அதிகபட்ச தொகை இது. மொத்தம், 3,594 பேர் கண்டுகளித்தனர். நடப்பாண்டு, 1,452 பேர், வருகை குறைவால், வருமானமும் குறைந்துவிட்டது,'' என்றார்.
போக்குவரத்து நெரிசல்: ஊரடங்கில் தளர்வுக்கு பின், கடந்த அக்., 8 முதல், சேலம் மாவட்டம், ஏற்காட்டுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. தொடர்ந்து, ஏற்காடு செல்லும் சுற்றுலா பயணியருக்கு, இ-பாஸ் கட்டாயம் என்பதும் தளர்த்தப்பட்டது. இதனால், நேற்று, கார், இருசக்கர வாகனங்களில் ஏராளமான வெளிமாவட்ட, மாநில சுற்றுலா பயணியர், ஏற்காட்டுக்கு படையெடுத்தனர். இதனால், அடிவாரத்தில் தொடங்கி, 18வது கொண்டை ஊசி வளைவு வரை, கார் உள்ளிட்ட கனரக வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சுற்றுலா பயணியர், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE