பனமரத்துப்பட்டி: அமானிகொண்டலாம்பட்டி ஊராட்சி, 60 லட்சம் ரூபாய் மின் கட்டணம் நிலுவை வைத்துள்ளதால், குடிநீர் வினியோகத்துக்கு மின் இணைப்பு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி எல்லையையொட்டி, அமானிகொண்டலாம்பட்டி ஊராட்சி உள்ளது. பனமரத்துப்பட்டி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள, இந்த ஊராட்சியில், தொழில் நிறுவனங்கள் நிறைந்துள்ளதால், ஆண்டுக்கு, 1 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். அதிக வருமானம் உள்ள ஊராட்சி, 60 லட்சம் ரூபாய் மின்கட்டணம், 17 லட்சம் ரூபாய், குடிநீர் வடிகால் வாரியத்துக்கு, நிலுவை வைத்துள்ளது. மின் கட்டண நிலுவையால், அமானிகொண்டலாம்பட்டியில், ஆழ்துளை குழாய் கிணறு - 3க்கு, மின் இணைப்பு கொடுக்க, மின்வாரியம் மறுத்துள்ளது. இதனால், ஒரு மாதமாக உள்ளுர் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஊராட்சியில், 180க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. மாதந்தோறும், 4.50 லட்சத்துக்கு மேல் மின்கட்டணம் வருகிறது. ஆனால், அரசிடமிருந்து மாதந்தோறும் சராசரியாக, 1.50 லட்சம் ரூபாய் மட்டும், மின் கட்டணத்துக்கு நிதி வருகிறது. குறைந்த நிதி வருவதால், மின்கட்டணம் நிலுவை வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'குடிநீர் அத்தியவசியமானது. மின் கட்டணத்தை தவணை முறையில் செலுத்தி விடுகிறோம். உடனே, மின் இணைப்பு வழங்க, மின் வாரிய அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE