கோபி: சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், எதிர்கால சந்ததியினர் பயன்பெறும் வகையிலும், 1,100 மரக்கன்றுகள் மூலம், 'அடர்வனம்' உருவாக்க, கோபி நகராட்சி முயற்சி மேற்கொண்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபி நகரில், எதிர்கால சந்ததியினர் பயன்பெறும் வகையில், சுற்றுச்சூழலை மேம்படுத்த, நகராட்சி நிர்வாகம் புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது. கோபி நகராட்சியின், 11வது வார்டு, ஐயப்பா நகரில் நகராட்சிக்கு சொந்தமான, ஒரு ஏக்கர் நிலத்தில், பொழுதுபோக்கு பூங்கா ஏற்கனவே உள்ளது. பூங்காவின் ஒரு பகுதியில், 35 சென்ட் இடம் தேர்வு செய்து, அடர்வனம் (மியாவாக்கி காடுகள்) உருவாக்க புது முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதற்காக, மூன்று அடி இடைவெளியில், 1,100 என்ற எண்ணிக்கையில், மூன்று அடி ஆழத்துக்கு குழி தோண்டி, 65 டன் குப்பை உரம் நிரப்பப்பட்டது. பின், நிழல் தரும் வகையிலும், பழ வகை மரக்கன்றுகள் நட்டு அசத்தியுள்ளனர். இதுகுறித்து, நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோபி நகரில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப, வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மரங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதே சூழல் நீடித்தால், எதிர்கால சந்ததியினர், சுகாதாரமான காற்று, சுற்றுச்சூழலுக்கு போராட வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், அடர்வனம் உருவாக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம்.
இதற்காக, அரசு, வேம்பு, கொய்யா, நாவல், மாமரம் என, 30 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. குறுகிய இடைவெளியில், நெருக்கமாக நடப்பட்ட மரக்கன்றுகள், சூரிய வெளிச்சத்தில் போட்டி போட்டு வளரும். உதாரணமாக இரண்டு ஆண்டில், பலன் தரும் மரம், ஓராண்டில் பலன் தரும். இத்திட்டத்துக்காக, கோபியை சேர்ந்த முக்கியஸ்தர்கள், தங்கள் பங்களிப்பாக, மரக்கன்றுகள் வாங்கி தந்துள்ளனர். இதேபோல், தனியார் பங்களிப்பாக அனைத்து மரக்கன்றுகளுக்கும், சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மரக்கன்றுகள், குறிப்பிட்ட ஆண்டுகளில், வளர்ச்சியடைந்ததும், சூற்றுச்சூழல் மேம்படும், நிலத்தடி நீர்மட்டம் உயரும், பறவைகள் இயற்கையாக மரங்களில் வந்து தஞ்சமடைய, ஆர்வம் காட்டும். ஈரோடு மாவட்டத்திலேயே, கோபி நகராட்சியில் மட்டுமே, அடர்வனம் அமைக்கும் முயற்சி, ஒரு மாதிரி திட்டமாக உருவாக்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE