பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வாணியாறு அணையிலிருந்து, உபரி நீர் வெளியேற்றப்படுவதால், கரையோர மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த முள்ளிக்காட்டில், வாணியாறு அணை உள்ளது. சேர்வராயன் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அணைக்கு, ஏற்காடு மலைப்பகுதியில் இருந்து, நீர்வரத்து வருகிறது. சில வாரங்களுக்கு முன், பெய்த தொடர்மழையால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. இதனால், மாவட்ட நிர்வாகம் சார்பில், வாணியாற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு ஏற்கனவே, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், அணையின் மொத்த கொள்ளளவான, 65.27 அடியில், நேற்று அணை நீர்மட்டம், 63 அடியாக உள்ளது. அணை பாதுகாப்பு கருதி, நேற்று முன்தினம் முதல், அணைக்கு வரும், உபரி நீர் முழுவதும் வாணியாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், வெங்கடசமுத்திரம், மோளையானூர் உள்ளிட்ட வாணியாற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பாக இருக்க, மாவட்ட நிர்வாகம் சார்பில், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE