கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, கடந்த, 10 ஆண்டுகளாக சேதமாக உள்ள சாலையை, உடனே புதுப்பிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி, பழையபேட்டை மகாராஜகடை சாலை, வெங்கடாபுரம் பஞ்.,ல், கிருஷ்ணகிரி மலையை சுற்றிக்கொண்டு லைன்கொள்ளை செல்லும், 2 கி.மீ., தார்ச்சாலை கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் கிரிவலம் செல்ல அமைக்கப்பட்ட இச்சாலையில், நாளடைவில் வாகனங்கள் செல்லத் துவங்கின. இச்சாலையில் அதிகளவில் லாரிகள் சென்று வருகின்றன. கடந்த, 10 ஆண்டுகளாக இச்சாலையை புதுப்பிக்காததால், சாலை முழுவதும் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. பல இடங்களில், கற்கள் பெயர்ந்து மண் சாலை மட்டுமே உள்ளது. இதனால், வாகனங்கள் செல்லும் போது, புழுதி பறந்து, அப்பகுதி முழுவதும் பரவுவதால், சாலையோரம் குடியிருக்கும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சாலை சேதமடைந்து வாகனங்கள் செல்வது குறைந்துள்ளதால், நகரத்தில் இருந்து அகற்றப்படும் கட்டடக்கழிவுகளை இச்சாலையில் கொட்டி வருகின்றனர். இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள், இரவில் கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். மழைக்காலங்களில், சாலையில் உள்ள பள்ளத்தில் தண்ணீர் தேங்கி, சாலை சேறும் சகதியுமாக மாறிவிடுவதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, இங்கு புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE