அரியலூர்: பட்டாசு வெடித்த தகராறில், பா.ம.க., மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மண்டை உடைந்தது. எட்டு பேரை, போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம், இலைக்கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமிதுரை, 48, இவர், பா.ம.க., பெரம்பலூர் மாவட்ட செயலராக உள்ளார். அதே ஊரை சேர்ந்தவர் சாமிநாதன், 45. இவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின், அரியலூர் மாவட்ட செயலராக உள்ளார். இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. தீபாவளியை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில், பா.ம.க.,வினர் காரில் வந்தனர் அப்போது, சாமிநாதன் வீட்டிற்கு முன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டு இருந்தனர். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் உருட்டு கட்டைகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில், அங்கு வந்த போலீசார், இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். அப்போது, துரைமுருகன், 40 என்ற போலீஸ்காரர் மண்டை உடைந்தது. போலீசார், அவரை மீட்டு, செந்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் தொடர்பாக, பா.ம.க., மாவட்ட செயலர் சாமிதுரை, ஒன்றிய செயலர் ராஜா உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். பா.ம.க., மாநில துணை பொது செயலர் திருமாவளவன் தலைமையில், நேற்று முன்தினம் இரவு, 12:00 மணியளவில், நூற்றுக்கணக்கானோர் செந்துறை போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். திருச்சி சரக டி.ஐ.ஜி., ஆனி விஜயா சென்று விசாரணை நடத்தினார். கைதான பா.ம.க., வினரை போலீசார் விடுவித்த பின், பா.ம.க., வினர் கலைந்து சென்றனர். இது குறித்த இரு தரப்பு புகார்படி, பா.ம.க., வை சேர்ந்த, 19 - 42 வயதுள்ள நான்கு பேர், தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த, 24 - 45 வயதுள்ள நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE