ஈரோடு: பஞ்சு மெத்தை, தலையணைகள், ஈரோட்டில் கூவிக்கூவி விற்கப்பட்டது. கொரோனா பரவலுக்கு பிறகு, தினக்கூலி பணியாளர்கள் பலர் வேலை இழந்துள்ளனர். இதனால் தங்களுக்கு தெரிந்த தொழிலை, சுயமாக செய்து, அன்றாட வருமானத்தை தொய்வின்றி ஈட்டிக் கொள்கின்றனர். இதனால் புதிதாக பழ வியாபாரம், காய்கறி வியாபாரம், தள்ளுவண்டி கடைகள், பிளாஸ்டிக் பொருள் விற்போர், இளநீர், குச்சிகிழங்கு, பிரியாணி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் விற்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த வரிசையில், ஈரோடு மாவட்டம் கோபியில் தயாரிக்கப்படும், காட்டன் பஞ்சு, மெத்தை, தலையணை விற்பனையும் சேர்ந்துள்ளது. விலை குறைவான பஞ்சால் தயாரிக்கப்பட்ட மெத்தை, 1,800 ரூபாய்க்கும், இரண்டு தலையணைகள், 120 ரூபாய்க்கும், ஈரோட்டில் நேற்று கூவிக்கூவி விற்பனை நடந்தது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: கோவையிலிருந்து வாங்கி வரப்பட்ட காட்டன் பஞ்சுகளை கொண்டு, மெத்தை, தலையணை தயார் செய்து, கோபியில் சொந்த இடத்தில் விற்பனை செய்து வந்தோம். வாடிக்கையாளர்கள் வருகை குறைந்ததால், வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஊர், ஊராக சென்று விற்று வருகிறோம், உற்பத்தி செலவுக்கு மேல், ஆள் கூலி, வண்டி வாடகை கிடைத்தால் போதும். கடைகளில் விற்பதை விட குறைவான விலைக்கு, மக்களின் வீட்டு வாசலுக்கே வந்து விற்கிறோம். இதனால் மக்களுக்கு லாபம்தான். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE