திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரை சீரமைக்கும் பணி தொடங்கியது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா வரும், 29ல், நடக்கிறது. இதையொட்டி, 2,668 அடி உயர மலை உச்சியில், மகா தீபம் ஏற்றப்படும். இதற்காக ஆறு அடி உயர கொப்பரை புதுப்பிக்கும் பணி, நேற்று தொடங்கியது. இதில் ஏற்றப்படும் தீபத்தை, 40 கி.மீ., தூரம் வரை பார்க்க முடியும். இதனால் வெப்பத்தால் கொப்பரை சேதமடையாமல் இருக்க, மேல் பாகம் மூன்றே முக்கால் அடி, கீழ்பாகம் இரண்டே முக்கால் அடி சுற்றளவு கொண்டவாறு, 150 கிலோ எடையில், 20 வளைய ராடுடன் கூடிய செப்புத்தகட்டில் செய்யப்பட்டுள்ளது. மேலும், கொப்பரையை மலை உச்சிக்கு எடுத்துச் செல்ல, மேல் பாகம் நான்கு வளையம், கீழ்பாகம் நான்கு வளையம் பொருத்தப்படும். தற்போது இவற்றை புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மகாதீபம் ஏற்றப்படும் மலை உச்சிக்கு, 28ம் தேதி கொண்டு செல்லப்படும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE