கரூர்: 'அமராவதி அணை நீர் பங்கீட்டில், கரூர் வஞ்சிக்கப்பட்டு வருகிறது' என, விவசாய சங்கங்கள் புகார் தெரிவித்துள்ளன.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் அமராவதி அணை உள்ளது. இங்கிருந்து திறந்து விடப்படும் தண்ணீர், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய ஆயக்கட்டு பகுதி, 25 பாசன வாய்க்கால் பகுதிகளில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இதில், கரூர் மாவட்டத்தில் உள்ள, 15 வாய்க்கால்கள் மூலம், அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான்தோன்றிமலை ஆகிய வட்டார பகுதி களில், 12 ஆயிரத்து, 700 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இங்கு, ஆகஸ்ட் மாதத்தில் சம்பா சாகுபடி செய்ய, அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதன்மூலம், பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில், 3,250 ஏக்கரில் நெல் சாகுபடி நடக்கும். இந்நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக அமராவதி ஆற்றில் இருந்து, புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு, சரியான நேரத்தில் நீரை திறக்கும் பொதுப்பணித்துறை, பழைய ஆயக்கட்டு ராஜ வாய்க்கால் பகுதிகளை புறக்கணித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, விவசாய சங்க நிர்வாகிகள் கூறியதாவது: அமராவதி ஆற்றின் உபரிநீரை மட்டுமே, பயன்படுத்த வேண்டும் என்பன போன்ற, பல்வேறு நிபந்தனைகள் அடிப்படையில், புதிய ஆயக்கட்டு கால்வாய்கள் வெட்டப்பட்டன. அங்கு அரசியல் கட்சிகளில் உள்ள, பெரிய விவசாயிகளின் நிர்ப்பந்தம் காரணமாக, அந்த ஆயக்கட்டு பகுதிகள் முக்கியத்துவம் பெற துவங்கி விட்டன. இதனால், சொந்த சாகுபடி நிலம் இருந்தும், அரிசியை வெளியில் வாங்க வேண்டி அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். பழைய ஆயக்கட்டு பகுதிகளை சேர்ந்த, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். கரூரிலிருந்த செயற்பொறியாளர் அலுவலகம், 2012ல் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்துக்கு மாற்றப்பட்டது. அதனால், பழைய ஆயக்கட்டு பகுதி விவசாயிகள் மனு கொடுக்க தாராபுரம் செல்ல வேண்டியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE