நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த சிவந்திபுரம் பகுதியில் சீட்டு கட்டி சேர்த்த பணத்தை தர மறுத்ததால் இளைஞர் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். சிசிடிவி.,யில் பதிவான காட்சிகளை கொண்டு சீட்டு பணம் தர மறுத்த மரிய செல்வம் என்பவரை காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்துள்ள சிவந்திபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் பால சுப்பிரமணியன். தச்சுத் தொழிலாளியான இவர், கஸ்பா என்ற பகுதியை சேர்ந்த மரிய செல்வம் என்பவரிடம் ஒரு லட்ச ரூபாய்க்கான சீட்டு போட்டுள்ளார். சீட்டு பணத்தை தவறாமல் கட்டி வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சீட்டு முதிர்வு காலம் அடையவே மரிய செல்வத்திடம் சீட்டு பணத்தை கேட்டுள்ளார். ஆனால் மரிய செல்வமோ கொடுக்க வேண்டிய சீட்டு பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து அலைக்கழித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தீபாவளிக்கு முந்தைய நாள் மரிய செல்வத்தின் வீட்டு முன்பு வந்து பாலசுப்பிரமணியன் தனது பணத்தை தர வேண்டும் இல்லை என்றால் தன் உயிரை மாய்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என கூறியுள்ளார். இதனை பொருட்படுத்தாமல் இருந்த மரிய செல்வம் முன்பு பாலசுப்பிரமணியன் தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். தீ மளமளவென பாலசுப்பிரமணியத்தின் உடல் முழுவதும் பரவியது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து தீக்காயம் அடைந்த பாலசுப்பிரமணியம் ஆம்புலன்ஸ் மூலம் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பாலசுப்பிரமணியன் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இந்த நிகழ்வை நேரில் பார்த்த மரியசெல்வம் எந்தவித பதட்டமும் இன்றி இங்கும் அங்கும் சென்றும், தனது இருசக்கர வாகனத்தை பாதுகாப்பாக நிறுத்துவதிலேயே முனைப்பாக இருந்துள்ளார். இந்த காட்சி முழுவதும் மரிய செல்வத்தின் வீட்டிலிருந்த சிசிடிவி கேமராவில் இருந்து போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு பணம் தராமல் ஏமாற்றியதோடு, ஒருவர் தீக்குளிக்க முயற்சிக்கும் போது காப்பாற்ற முயற்சிக்காத மரிய செல்வத்தை விக்கிரமசிங்கபுரம் போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE