ஜெய்பூர்: 'தீபாவளி பண்டிகையின் போது, உள்ளூர் பொருட்களுக்கு மக்கள் அளித்த ஆதரவு, எப்போதும் தொடர வேண்டும்; அதுவே நம் பொருளாதாரத்தை வலுப்படுத்தும்' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ராஜஸ்தானைச் சேர்ந்த, புத்த துறவி விஜய் வல்லப சுரிஷ்வரின், 151வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலையை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்; அப்போது அவர் பேசியதாவது:துறவி விஜய் வல்லப சுரிஷ்வர், கல்வி மற்றும் பெண்கள் மேம்பாட்டுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர். தற்போது, நாடும் அந்த திசையில் தான் பயணிக்கிறது. பெண்களுக்கு எதிரான, முத்தலாக் நடைமுறை ஒழிக்கப்பட்டது.
ராணுவத்திலும், பெண்கள் இடம்பெறத் துவங்கியுள்ளனர். புதிய கல்விக் கொள்கை, பெண்களுக்கு பல புதிய வாய்ப்புகளை உருவாக்கி தர உள்ளது.அமைதிக்கான வழி, அஹிம்சை, சமுதாய நல்லிணக்கம் போன்றவற்றையே துறவிகளும், ஞானிகளும் போதித்து வந்துள்ளனர்; அது, மக்கள் மத்தியில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்க கூடியது.
துறவிகளும், ஞானிகளும் உரை நிகழ்த்துகையில், உள்ளூர் பொருட்களை ஊக்குவிக்கும்படி மக்கள் மத்தியில் கோரிக்கையை முன் வைக்க வேண்டும்.தீபாவளி பண்டிகையின் போது, உள்ளூர் பொருட்களுக்கு, மக்கள் தங்கள் ஆதரவை அளித்தனர். இந்த போக்கு, எப்போதும் தொடர வேண்டும். இதுவே, நம் பொருளாதாரத்தை வலுப்படுத்தும்.இவ்வாறு அவர் பேசினார்.
பத்திரிகைகளுக்கு பாராட்டு
தேசிய பத்திரிகை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இது குறித்து, பிரதமர் மோடி வெளியிட்ட செய்தியில், 'கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில், பத்திரிகைகளின் சேவை, பாராட்டுக்குரியது. தொற்று காலத்துக்கு பின், சுயசார்புள்ள இந்தியாவை உருவாக்க, அவர்களின் ஆதரவு அவசியம் தேவை' என, குறிப்பிட்டு உள்ளார்.-
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE