வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட மருந்து நிறுவனங்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. இவற்றுள் 40-க்கும் மேற்பட்ட மருந்து நிறுவனங்கள் மூன்றாம் கட்ட பரிசோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் முன்னதாக அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனமும் இணைந்து கண்டுபிடித்த ஓர் தடுப்பு மருந்து 90 சதவீத நோயாளிகளை குணப்படுத்துகிறது என தகவல் வெளியானது.
இதனை அடுத்து பிரிட்டன், பைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்தை வாங்க முன்வந்துள்ளது. தற்போது மேலும் ஒரு நிறுவனம் வீரியமிக்க தடுப்பு மருந்தை கண்டுபிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மாடர்னா என்ற தடுப்பு மருந்து நிறுவனம் உருவாக்கிய தடுப்பு மருந்து 95.4% வீரியத்துடன் கொரோனா வைரஸை போக்குகிறது எனக் கூறப்படுகிறது. அமெரிக்க நிறுவனமான மாடர்னா, பைசர் நிறுவனத்தை அடுத்து தற்போது புகழ்பெற்று வருகிறது.
இதுகுறித்து அமெரிக்க நோய்த்தடுப்பு நிபுணர் டாக்டர் ஆண்டனி பெளசி கூறுகையில், மாடர்னா தடுப்பு மருந்துகள் வெற்றிகரமான முடிவுகளை காண்பிக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனத்தின் தலைமை மருத்துவர் டாக்டர் ஜாக்ஸ் கூறுகையில் 'என்னுடைய மருத்துவ பணியில் நான் பார்த்த மிகவும் வீரியமிக்க தடுப்பு மருந்து இதுதான்' என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். வரும் டிசம்பர் மாதத்தின் இரண்டாம் பகுதியில் இந்த தடுப்பு மருந்து கொரோனா நோயால் அதிகமாக தாக்கப்பட்ட பகுதிகளில் பயன்படுத்தப்படும் என ஆண்டனி பெளசி தெரிவித்துள்ளார்.
மாடர்னா தடுப்புமருந்து 15 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு செலுத்தப்பட்டது. இதில் 90 பேர் கடுமையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனை அடுத்து மேலும் 17 ஆயிரம் தன்னார்வலர்கள் உடலில் இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. இவர்களில் யாருக்கும் அதிக பாதிப்பு ஏற்படவில்லை. இந்த தடுப்பு மருந்தின் காரணமாக அதீதமான பக்கவிளைவுகள் யாருக்கும் ஏற்படவில்லை என மாடர்னா நிறுவன தலைமை தெரிவித்துள்ளது.

தலைவலி, உடல் வலி உள்ளிட்ட சிறிய உபாதைகள் மட்டுமே ஏற்பட்டதாக கூறியுள்ளது. விரைவில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிறுவனத்தின் அங்கீகாரத்துக்கு இந்த தடுப்பு மருந்தை அனுப்ப உள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு மே மாதம் தொடங்கி ஜூலை மாதத்திற்குள் அமெரிக்காவில் கொரோனா கடுமையாக தாக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் இந்த தடுப்பு மருந்து செலுத்தப்படும் என ஆண்டனி பெளசி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களின் தடுப்பு மருந்துகள் ஒரே மாதிரியான முறையை பின்பற்றி நோயாளியின் உடலில் எதிர்ப்பு சக்தியை தோற்றுவிக்கின்றன. இவை இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். எம்-ஆர்என்ஏ நோயாளியின் உடலில் செலுத்தப்படுகிறது. இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட நோயாளியின் உடலில் பிந்நாட்களில் கொரோனா வைரஸ் புகுந்தால் அவற்றை எதிர்கொள்ள இந்த வகை ஆர்என்ஏ தயார் நிலையில் இருக்கும். எம்-ஆர்என்ஏ-வை வேறு எந்த தடுப்பு மருந்தும் பயன்படுத்த வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்தைக் காட்டிலும் மடர்னா தடுப்பு மருந்தில் சாதகமான விஷயம் ஒன்று உள்ளது. பைசர் தடுப்பு மருந்துகள் -75 டிகிரி குளிர் நிலையில் பாதுகாக்கப்பட வேண்டும். இதனால் இவற்றை வெப்ப மண்டல நாடுகளுக்கு எடுத்துச் செல்வதும் பாதுகாப்பதும் மிகவும் சிரமம். ஆனால் மாடர்னா தடுப்பு மருந்துகள் மைனஸ் 20 டிகிரி குளிர் நிலையில் பாதுகாக்கப்பட்டாலே போதுமானது. சின்னம்மைக்கான தடுப்பு மருந்துகள் -20 டிகிரி குளிர் நிலையிலேயே பாதுகாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த வெப்பநிலையில் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலுமே குளிர்சாதனப் பெட்டிகள் உள்ளன. இவற்றை பாதுகாப்பதற்காக பிரத்தியேகமான குளிர்சாதனப்பெட்டி தேவையில்லை.
மாடர்னா தடுப்பு மருந்தில் மேலும் ஒரு சாதகமான விஷயம் உள்ளது. இந்தத் தடுப்பு மருந்துகளை 30 நாட்கள் குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாக்க முடியும். ஆனால் பைசர் தடுப்பு மருந்துகளை அதிகபட்சமாக ஐந்து நாட்கள் மட்டுமே பாதுகாக்க முடியும். இதனால் தற்போது மாடர்னா தடுப்பு மருந்துகள் அமெரிக்காவில் புகழ்பெறத் துவங்கியுள்ளன. இது வெற்றி பெற்றால் இந்த நிறுவனம் உலகம் முழுவதும் தங்களது தடுப்பு மருந்தை விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE