இன்று மாலை, 3:00 மணிக்கு, டில்லியில், பா.ஜ., தலைவர்களான மோடி, நட்டா, அமித் ஷா ஆகியோர், தமிழக அரசியல் நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர். வரும், 21ல் தமிழகம் வரும் அமித் ஷா, என்ன பேசப்போகிறார் என்பது பற்றிய ஆலோசனையாக இது அமைவதால், தமிழக அரசியல், இனி சூடு பிடிக்கும்.
மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா, வரும், ௨௧ல் சென்னை வருகிறார். உட்கட்சி செயல்முறைகள், சட்டசபை தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும், யாருடன் கூட்டணி வைப்பது, கூட்டணி வைத்தால், எந்தெந்த தொகுதியில் சாதகமான முடிவு வரும் என்பது குறித்து, மிக நீண்ட ஆலோசனை நடத்த உள்ளார்.
ஒவ்வொரு மாநிலத்திலும், சட்டசபை தேர்தல் நடப்பதற்கு முன், சரியான முறையில் வியூகம் வகுக்கும் வகையில், பல தகவல்களுடன், பிரதமர் மோடியை, அமித் ஷா சந்திப்பது வழக்கம்.
கர்நாடகா, மஹாராஷ்டிரா, பீஹார் மாநில தேர்தல் வெற்றிகளுக்கு, அமித் ஷா தான் வியூகம் வகுத்தார். அடுத்து, மேற்கு வங்கத்திற்கும் வியூகம் வகுத்து கொடுத்துள்ளார்.
இன்று, தமிழகத்திற்கான தேர்தல் வியூக சந்திப்பு நடக்க உள்ளது. டில்லியில் உள்ள பா.ஜ., தலைமையகத்தில், பிரதமர் மோடி - நட்டா - அமித் ஷா சந்திப்பு நடக்கிறது.
தமிழகம் தொடர்பான அனைத்து தகவல்களும், உளவுத்துறை, தமிழக தலைவர் முருகன் மற்றும் பொறுப்பாளர் ரவி ஆகியோர் தவிர, மிக நம்பத்தகுந்த வட்டாரங்கள் வாயிலாகவும், 10 பக்க அறிக்கையாக அமித் ஷாவிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் பேசக்கூடிய விஷயங்கள்:
* தேர்தல் நடக்க உள்ள மாதம்
* தமிழக மக்களின் மனநிலை
* தி.மு.க., குறித்த மக்களின் கருத்து
* அ.தி.மு.க., குறித்த மக்களின் கருத்து
* தி.மு.க.,வின் ஓட்டு சதவீதம்; எந்த ஜாதியினர் அவர்களுக்கு ஓட்டு போடுகின்றனர்; எந்தக் கூட்டணியில் அவர்களுக்கு எவ்வளவு ஓட்டு விழுகிறது, பிரிகிறது
* இதே போல், அ.தி.மு.க.,வினருக்கும்
* பா.ஜ., கூட்டணி வைத்தால், யாருக்கு லாபம்; பா.ஜ.,வுக்கு என்ன லாபம்
* அனைத்து ஜாதியினர் மத்தியிலும், பா.ஜ.,வினரின் ஓட்டு சதவீதம்
* மக்களின் தேவைகள்
* தேர்தல் அறிக்கைக்கு என்னென்ன தகவல்கள் தேவை
* ரஜினி அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும்
* வரச் சொல்லி, 'ஓப்பன்' அழைப்பு விடலாமா, வேண்டாமா
* ரஜினி வந்தால், கூட்டணி கணக்கு எப்படியெல்லாம் மாறும்
* தற்போதைய கணிப்புப் படி, யாருக்கு ஓட்டு விழ வாய்ப்பு
* என்ன செய்தால் ஓட்டு சதவீதம், அனைத்து கட்சிக்கும் மாறும்
இத்தகைய விஷயங்களை இவர்கள் மூவரும் பேசி, அதன் அடிப்படையில் கருத்துரு தயாரித்து, அதனுடன் சென்னை வருகிறார் அமித் ஷா. தமிழக அறிஞர்கள், முக்கியமாக திருவள்ளுவர், கணியன் பூங்குன்றனார் முதலானோருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், அவர்களை முன்னிலைப்படுத்தி, வியூகம் வகுக்கப்படுகிறது. எனவே, 21 பேச்சுக்குப் பிறகு, தமிழக அரசியலில் மிகப் பெரிய மாற்றம் தென்படும். - புதுடில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE