சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

அல்லல்பட்டு கிடக்கிறது கடற்கரை!

Updated : நவ 18, 2020 | Added : நவ 16, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
அதிக அந்நியச் செலாவணியை ஈட்டக் கூடிய, கடலோர மீன்பிடித்தல் மற்றும் உள்நாட்டு மீன் வளர்ப்பு போன்றவை, இந்தியாவில் ஓரளவு வளர்ந்திருக்கிறது. எனினும், விவசாயத்துக்கு இணையான தொழில்துறையாக மீன்பிடித்தலை மாற்றுவதில், தேசிய அளவில் மிகவும் பின்தங்கியே இருக்கிறோம். வணிகம் சார்ந்து மீன்பிடித்தலில், சில திட்டங்கள் செயலாக்கத்திற்கு வந்திருந்தாலும், அவை பாரம்பரிய மீனவர்
அல்லல்பட்டு கிடக்கிறது கடற்கரை!

அதிக அந்நியச் செலாவணியை ஈட்டக் கூடிய, கடலோர மீன்பிடித்தல் மற்றும் உள்நாட்டு மீன் வளர்ப்பு போன்றவை, இந்தியாவில் ஓரளவு வளர்ந்திருக்கிறது. எனினும், விவசாயத்துக்கு இணையான தொழில்துறையாக மீன்பிடித்தலை மாற்றுவதில், தேசிய அளவில் மிகவும் பின்தங்கியே இருக்கிறோம்.

வணிகம் சார்ந்து மீன்பிடித்தலில், சில திட்டங்கள் செயலாக்கத்திற்கு வந்திருந்தாலும், அவை பாரம்பரிய மீனவர் வாழ்வில் முன்னேற்றத்துக்கான மாற்றங்களைச் செய்யவில்லை. நாட்டின் அடித்தள மக்கள் வாழ்வை ஆராய்ந்தால், பாரம்பரிய மீனவர் வாழ்வு மிகவும் பலவீனமானதாகவே இருக்கிறது.

இந்திய தீபகற்பம் எங்கும் மீனவர்கள் சமுதாய, கல்வி, பொருளாதார மற்றும் அரசியல் விழிப்புணர்வு குறைந்தவர்களாகவே பெரும்பாலும் வாழ்கின்றனர். போதிய நிதியாதாரம், மட்டற்ற செலவு, கூட்டு முயற்சி, தேவைக்கேற்ப தொழில்நுட்பங்களை நோக்கி நகரும் பண்பு போன்றவை இல்லாத காரணங்களால் சமூக, பொருளாதார, அரசியல் பின்னடைவுகளை நாளும் சந்திக்கின்றனர். கடந்த, 2004 டிசம்பர் ௨௬ல் ஏற்பட்ட, 'சுனாமி'க்கு பின் தான், கடலோரத்தில் மீனவர்கள் என்ற இனக்குழு வாழ்கிறது என்ற செய்தியே உள்நாட்டுக்கே எட்டியிருக்கும்போல் தெரிகிறது. உள்நாட்டில் குடிமக்கள் அமைதியாக, பாதுகாப்பாக வாழ வேண்டுமானால், அதற்கு எல்லைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இந்தியத் தீபகற்பத்தின், 8,118 கி.மீ., கடற்கரையின் எல்லைச்சாமிகள், பாரம்பரிய மீனவர்கள் தான். பாரம்பரிய மீனவர்கள் எல்லைப் பகுதிகளில் ஒதுங்கி வாழ்ந்தாலும், தேசத்தின் கடல் எல்லைகளின் காவலர்களாய் இவர்கள் இருக்கின்றனர்.இவர்களது பூரண பாதுகாப்பில் தான், சமவெளி மற்றும் மேட்டு நிலச்சமூகங்கள், உள்நாட்டில் இயல்பாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.


சமவெளி அரசியல்கடலோர மக்களின் பிரச்னைகளுக்கான தீர்வுகளை முன்வைத்து, 1997 செப்டம்பர், 27ல் பார்லிமென்டில் சமர்ப்பிக்கப்பட்டு, ஒப்புதல் வழங்கப்பட்ட, முராரி குழுவின் பரிந்துரைகள் இன்று வரை செயலாக்கத்துக்கு வரவில்லை. காற்றின், கடலின், அலையின், நீரோட்டங்களின், சூரிய, சந்திர நட்சத்திரங்களின் தன்மை புரிந்த, இந்தப் பாரம்பரிய மீனவர்கள், இயற்கையைச் சார்ந்தே தங்கள் வாழ்வை நடத்துகின்றனர். இயற்கையின் சவால்களை நாளும் எதிர்கொள்ளும் இந்த மக்களின் வாழ்வை சமவெளிசார் சமூகம் புரிந்து கொள்ள மறுக்கிறது. கடலோரங்
களுக்கு அண்மையில் அமைந்த சமவெளியின், பிராந்திய அரசியல்வாதிகளால், உள்நோக்கத்தோடு இவர்களின் அரசியல் பிரதிநிதித்துவமே இல்லாமல் ஆகியிருக்கிறது.

தப்பித் தவறி, ஒரு சில இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மீனவ பஞ்சாயத்துத் தலைவர்கள் கூட, செயல்பட முடியாமல் திணறுகின்றனர். காரணம், சமவெளி அரசியல் கொடுக்கும் அழுத்தம்.அரசின் எந்த நலத்திட்டமும், இந்த சிறு தலைவர்கள் மூலம், செயலாக்கத்திற்கு வர விடாமல் தடுத்துவிடுகிறது, சமவெளி அரசியல். விளைவு, கடற்கரையில் செயல்படுத்தப்படும் எந்தத் திட்டமும், மீனவர்களுக்கானதாக இல்லை. இதில், எந்த அரசியல்கட்சியும் விதிவிலக்கல்ல.நாளின் பெரும் பகுதியைத் தங்கள் தொழில்வெளியான கடலில், மீனவர் செலவிடுவதால், நிலம் சார்ந்த வாழ்வின் தாத்பர்யம், அவர்களுக்குப் புரியவில்லையோ என்ற கருத்தையும் மறுப்பதற்கில்லை.அதற்காக ஒரேயடியாக, மீனவர்களிடமிருந்து தலைவர்கள் வரவில்லை என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.


பொதுவுடைமைக் கருத்துக்கு வித்திட்ட, சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரும், அன்றைய சென்னை மாகாணத்தின், உணவு மற்றும் விவசாய அமைச்சராக இருந்த, ஜே.எல்.பி.ரோச் விக்டோரியாவும், பெருந்தலைவர் காமராஜர் அமைச்சரவையை அலங்கரித்த லுார்தம்மாள் சைமனும், அரசியலுக்கான கடலோரச்சமூகங்களின் கொடையே. கடந்த பல ஆண்டுகளாக தீபகற்பம் எங்கும் நடக்கும் பாரம்பரிய மீனவருக்கும், விசைப் படகு மீனவருக்குமான பிரச்னை, இன்று வரை தீர்ந்தபாடில்லை. பாரம்பரிய மீனவரின் தொழில்வெளியான கரைக்கடல் பகுதிக்குள் நுழையும் விசைப்படகு மீனவர்கள்; அதுபோலவே, விசைப்படகு மீனவரின் தொழில்வெளியான அண்மைக் கடல் பகுதிக்குள் நுழைந்து, அத்துமீறி இழுவை வலைத் தொழிலால், அந்தப் பகுதியை கபளீகரம் செய்யும் வணிக மீனவர்கள்.

இழுவை வலை மீன்பிடிப்பு, இந்தியக் கடலோரத்திற்கு ஏற்ற தொழில் நுட்பமல்ல என்று எத்தனையோ ஆய்வு முடிவுகள் வலியுறுத்தியும், இன்னும் எந்த நடவடிக்கையும் இல்லை.ஆட்சி, அதிகாரத்திலிருக்கும் சமவெளிசார் அரசியல்வாதிகளும், ஆதிக்க மனப்பான்மையோடு செயல்படும், இந்த வணிக மீனவருக்கே சாதகமாய், திட்டங்களையும், சட்டங்களையும் நாளும் இயற்றுகின்றனர்.காரணம், மீன் வளத்தை அழித்துப் பெரும் லாபத்தில் அவர்களுக்கும் பங்கு. இது போன்ற அரசியல் தொடர்புகளால் வணிக மீனவரை, எந்த சட்ட வரையறைக்குள்ளும் கொண்டு வர முடிவதில்லை.


தவறான நடைமுறைபாரம்பரிய மீனவரும், தங்கள்சுயதொழிலை விட்டு, தொழில்முறை மீனவராய், கூலியாய், வணிக மீனவரிடமே வேலைவாய்ப்பு தேடும் பரிதாப நிலை, கடலோரமெங்கும் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலை, வரும் காலங்களில் மிக மோசமான சூழலை நாடெங்கும் ஏற்படுத்தும்.கரையோர மீன்பிடித்தலும், முதலீடு சார்ந்த தொழிலாக மாறுவது, இந்தியப் பொருளாதாரத்திற்கு ஏற்புடையது அல்ல. இதன் தாக்கம் பாரம்பரிய மீனவரும், கடல்வளத்தைக் கருத்தில் கொள்ளாமல் கிடைத்ததைப் பிடிப்பது என்ற தவறான நடைமுறைக்கு நகர வழி செய்யும்.

தகுதிக்கு மீறிய, தேவையற்ற, தவறான, அதிக முதலீட்டை வேண்டும் தொழில்நுட்பத்தை, பாரம்பரிய மீனவரே தேடிப்போனால், குறுகிய காலத்தில் அதிக உற்பத்தி என்ற மாயையை அது காட்டி, வரும் காலங்களில், மீன் உற்பத்தி குறைந்து, மீளமுடியாத கொடிய கடன் வளையத்துக்குள் அவர்களைக் கொண்டு சேர்க்கும். சமீப காலங்களில், அறிமுகமான தொழில்நுட்பங்களால், பாரம்பரிய கடற்கரைகளில் முதலாளித்துவம் புகுந்து, முதலீடு செய்ய முடியாத பாரம்பரிய மீனவர்களைக் கூலிகளாக்கி, வேடிக்கை பார்க்கிறது. ஒருவரைப் பார்த்து, மற்றவர் என முண்டியடித்து, தகுதியை மீறி கடன் வாங்கி, முதலீடு செய்தவர்களும், மீளமுடியாத கடன் தொல்லையால் தவிக்கின்றனர்.தேவையற்ற இந்தச் செயல்பாடுகளால், ஒட்டுமொத்தக் கடலோர மீனவ சமூகங்கள் இன்று, சமவெளிசார் கந்து வட்டிக்காரர்களின் பிடியில் சிக்கியுள்ளன.

விரைவில் கெட்டுப்போகும் நிலையில், கரைக்கு கொண்டு வரப்படும் மீன்களுக்கு சரியான விலை கிடைக்காதது ஒருபுறம். அதன் மூலம் பெறப்படும் வருமானம் அன்றாடத் தேவைகளுக்காக பன்மடங்கு செலவு செய்யப்படுவது மறுபுறம் என, வேதனை தொடர்கிறது.தங்களின் அன்றாடத் தேவைகளுக்கான செலவு, நியாயமானது தானா என்று அலசி ஆராய்வதற்குக் கூட, மீனவர்களின் தொழில் முறை அனுமதிப்பதில்லை. இந்தச் சூழலைத் தங்களுக்குச் சாதகமாய் பயன்படுத்திக் களிக்கிறது, மீனவ ஊர்களை சுற்றியுள்ள சமவெளி ஊர்கள். மீனவ ஊர்களின் உணவு, உடை, உறைவிடம், குடிநீர், கல்வி, மருத்துவம், தொழில் சாதனங்கள் என எந்தச் செலவானாலும், சுற்றியுள்ள சமவெளி வணிகர்களுக்கு, வியாபார வாய்ப்பாகி, பெரும் வருமானமாகி விடுகிறது.

ஆட்சி, அதிகாரத்தோடு தொடர்புடைய எந்த அலுவலகங்களும், மீனவ ஊர்களில் அமைவதை, சுற்றியுள்ள சமவெளிசார் அரசியல்வாதிகள் விரும்புவதில்லை. 'கடலில், இயற்கையை எதிர்த்துப்பொருளீட்டுங்கள். ஆனால், அதன் பொருளாதாரப் பலன்கள் அனைத்தும் எங்களுக்கானது' என்ற மனிதாபிமானம் மீறிய, சமவெளிச் செயல்பாடுகளால் அல்லல்பட்டுக் கிடக்கிறது கடற்கரை. கல்வி மற்றும் பொருளாதார ரீதியாய் ஓரளவு மறுமலர்ச்சி அடைந்த சமூகங்களாக, தென் தமிழக கடலாடிகள் இருக்கின்றனர்.

கடந்த, 16ம் நுாற்றாண்டின் தொடக்கத்தில், உள்நோக்கத்தோடு, ஆன்மிக வழிநடத்துகிறோம் என உள்நுழைந்தது கத்தோலிக்கம்; மீனவ தலைமைகளைக் காவு வாங்கியது. பிரச்னைகளின் உச்சத்தில் கூடி ஜெபிக்கக் கற்றுக் கொடுத்த கத்தோலிக்கம், இன்று வரை, துடிப்பான தலைமை, அந்த மக்களிடமிருந்தே வர விடாமல் நாளும் கண்காணித்து, தடுத்து விடுகிறது.

மதம் என்பது தனிமனித நம்பிக்கை என்ற புரிதல், கடலோடிகளிடமும் இல்லை. ஆயனில்லா ஆடுகளாக இருப்பதால், பேரிடராய் இருந்தாலும், சிறு சமூக பிரச்னையாய் இருந்தாலும், ஆன்மிகத் தலைமைகளையே, அவர்கள் முன்னிலைப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
கடந்த பல பத்து ஆண்டுகளில், கடற்கரையூர்களைச் சுற்றியுள்ள நிலங்கள், முற்றிலுமாக பறிபோய் இருக்கின்றன.

மண் எடுக்கிறேன், உப்பு விளைவிக்கிறேன் என, ஊர்களுக்குள் புகுந்து நிலத்தடி நீரைப் பாழ்படுத்தியதோடு மட்டுமல்லாமல், ஊருக்குள்ளும் பிரிவினைகளை உண்டாக்கி, கோஷ்டி மோதல்களுக்கும் காரணமாகிஇருக்கின்றனர் சமவெளிக்காரர்கள். மக்கள்தொகை பெருக்கம் சார்ந்து அக்கம், பக்கம் நகர முடியாமல் மீனவர்கள் தவிக்கின்றனர். காரணம், கடற்கரை ஊர்களைச் சுற்றியுள்ள நிலங்கள் எல்லாமே, இன்று, சமவெளிக்காரர்கள் கையில்.இது போதாதென்று, நகர்ப்புறம்சார் கடற்கரைப் பிரதேசங்களை, அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில், பாரம்பரிய மீனவரை, அவர்களின் தொழில்வெளியிலிருந்து அப்புறப்படுத்தும் வேலையும் நடக்கிறது.

இந்தச் சூழல் தொடர்ந்தால், கடலே தங்கள் தாயாய், கடற்கரையே தங்கள் தாய் மடியாய் காக்கும் பாரம்பரிய மீனவர்கள், எங்கு போவர்; இந்தத் தொழில் அழிந்தால், வேலைவாய்ப்புத் திண்டாட்டம் பெருகி,அது நாட்டின் பொருளாதாரத்தில் எதிரொலிக்காதா?இந்த பிரச்னைகளை தீர்க்க, ஜாதி, மத நம்பிக்கைகளைக் கடந்து, மீனவர்கள் இனமாய் கைகோர்த்துக் கொள்ளவேண்டும். கடலோர வாழ்வு தங்கள் பிறப்புரிமை என்பதை மனதில் கொண்டு, அதற்கு ஊறுவிளைவிக்கும் எந்தச் செயல்பாட்டையும் இனமாய் எதிர்கொள்ள வேண்டும்.
இந்த நாடும் வளமடையும்மீன் பிடித்தலில் கரைக்கடல், அண்மைக்கடல், ஆழ்கடல் தொழில்கள், அதற்கான கட்டமைப்பு, எல்லைகள் மற்றும் சட்ட, திட்டங்களோடு அரசு முறைப்படுத்த வேண்டும். சட்டசபைகளிலும், பார்லிமென்டிலும் மீனவரின் குரல் வலுவாய் ஒலிக்கச் செய்யவேண்டும்.கடலோர வாழ்வு பதிவு செய்யப்பட்டு, சமவெளிச் சமூகங்களோடு தொடர் உரையாடலை முன்னெடுக்க வேண்டும். அது சமூக, அரசியல், பொருளாதார அரங்கில் பெரும் புரிதலை ஏற்படுத்தி, வாழ்வை வளமாக்க வழிசெய்யும். தீபகற்பமெங்கும் இழுவை வலை மீன் பிடிப்பைத் தடை செய்து, தகுதி வாய்ந்த மீனவர்களை, ஆழ்கடல் மீன்பிடித்தலுக்குச் செல்ல, அரசு அக்கறையோடு ஊக்குவிக்க வேண்டும்.

மீன் பிடித்தல் இந்தத் தலைமுறையினருக்கானது மட்டுமல்ல; வருங்காலத் தலைமுறைகளுக்கானது என்பதைப் புரிந்து, கடல்வளத்தையே கெடுக்கும் தொழில்நுட்பத்தை அனுமதிக்கவோ, பயன்படுத்தவோ மாட்டோம் என மீனவர்கள் உறுதி ஏற்கவேண்டும்.படித்த மீனவ இளைஞர்கள் அரசின் நிதி, நீதி, கல்வி, காவல், பாதுகாப்பு, வங்கி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றத் துடிப்புடன் முன்வர வேண்டும். சக்தி வாய்ந்த ஆட்சிப் பணி அதிகார மையங்களிலும், மீனவ இளையோர் இடம்பெற வேண்டும்.இதுபோன்ற மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே, மீனவ சமுதாயம் முன்னேறும்; அதனால், இந்த நாடும் வளமடையும்!ஜோ டி குரூஸ் 'சாகித்ய அகாடமி' விருது பெற்ற எழுத்தாளர் தொடர்புக்கு: இ - மெயில்: rnjoedcruz@gmail.com

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundaram - CHENNAI,இந்தியா
17-நவ-202017:14:42 IST Report Abuse
sundaram மிகவும் அருமையான கருத்துக்கள் கொண்ட ஒரு கட்டுரையை வழங்கியதற்கு திரு.க்ரூஸ் அவர்களுக்கு நன்றி. இவரைப்போன்ற ந டு நிலைவாதிகள் சொல்வதை எவரும் ஏற்றுக்கொள்ளாமல் அவரவருக்கு தோன்றியதை செய்து கொண்டிருப்பதால் தான் மீனவர்களில் பெரும்பாலோர் இவர் சொல்வதுபோல் வறுமையில் உழல்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X