பாட்னா : பீஹார் முதல்வராக, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார், 69, ஏழாவது முறையாக, நேற்று பதவியேற்றார். அவருடன், பா.ஜ.,வைச் சேர்ந்த இரண்டு துணை முதல்வர்கள் உட்பட, 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
பீஹார் சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், மொத்தமுள்ள, 243 தொகுதிகளில், தே.ஜ., கூட்டணி, 125 இடங்களைப் பெற்றது. அந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம், 43 இடங்களில் மட்டுமே வென்றது. கூட்டணியின் மற்றொரு முக்கிய கட்சியான, பா.ஜ., 74 தொகுதிகளை கைப்பற்றியது. கூட்டணியில் அதிக இடங்களில் வென்றதால், முதல்வர் பதவியை, பா.ஜ., கோருமா என்ற கேள்வி எழுந்தது.'தேர்தலுக்கு முன் செய்த ஒப்பந்தத்தின்படி, ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமார் தான் முதல்வராக பதவியேற்பார்' என, பா.ஜ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பாட்னாவில் நேற்று முன்தினம் நடந்த, தே.ஜ., கூட்டணி கட்சிகளின், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், முதல்வராக, நிதிஷ் குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.இதையடுத்து, கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதங்களுடன், மாநில கவர்னர் பாஹு சவுகானை சந்தித்து, ஆட்சி அமைக்க, நிதிஷ் உரிமை கோரினார். ஆட்சி அமைக்க, அவருக்கு கவர்னர்அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், பீஹார் முதல்வராக ஏழாவது முறையாகவும், தொடர்ச்சியாக நான்காவது முறையாகவும், நிதிஷ் குமார், நேற்று மாலை பதவியேற்றார். அவருக்கு கவர்னர் சவுகான், பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். நிதிஷைத் தொடர்ந்து, 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். துணை முதல்வர் பதவிக்கு, அரசியல் சட்ட அங்கீகாரம் கிடையாது. எனினும், பா.ஜ., சார்பில் அமைச்சர்களாக பொறுப்பேற்ற தர்கிஷோர் பிரசாத், ரேணு தேவி ஆகியோர் துணை முதல்வர்களாக அறிவிக்கப்பட்டனர்.அமைச்சரவையில், ஐக்கிய ஜனதா தளம் சார்பில், முதல்வர் நிதிஷ் உட்பட ஐந்து பேரும், பா.ஜ., சார்பில், ஏழு பேரும், ஹிந்துஸ்தான் அவாமி மோர்ச்சா, விகாஷீல் இன்சான் ஆகிய கட்சிகளின் சார்பில், தலா ஒருவரும் இடம் பெற்றுள்ளனர்.
பதவியேற்பு விழாவில், பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிதிஷ் குமார் தலைமையிலான முந்தைய அரசில், துணை முதல்வராக இருந்த, பா.ஜ., வின் சுஷில்குமார் மோடிக்கு, இந்த முறை, அந்த பதவி கிடைக்கவில்லை. அவர், மத்திய அமைச்சராக வாய்ப்புள்ளதாக, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.
வளர்ச்சிக்கு துணை நிற்போம்
பீஹார் முதல்வராக பதவியேற்ற நிதிஷ் மற்றும் அமைச்சர்களுக்கு வாழ்த்துகள். பீஹாரின் வளர்ச்சிக்காக, தே.ஜ., கூட்டணி குடும்பம், ஒன்றிணைந்து செயல்படும். பீஹார் வளர்ச்சிக்காக, மத்திய அரசு துணை நிற்கும். நரேந்திர மோடி, பிரதமர்
தொடர்ந்து முதல்வர்!
பீஹாரில் மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்ற நிதிஷ் குமாருக்கு வாழ்த்துகள். உங்களை, பா.ஜ., மீண்டும் முதல்வராக்கியுள்ளது. நீங்கள் தொடர்ந்து, தே.ஜ., கூட்டணியின் முதல்வராக இருப்பீர்கள் என நம்புகிறேன்.சிராக் பஸ்வான், தலைவர், லோக் ஜனசக்தி
'மெகா' கூட்டணி புறக்கணிப்பு
பீஹார் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்ற நிகழ்ச்சியை, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான, 'மெகா' கூட்டணி புறக்கணித்தது. இது குறித்து, முன்னதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் வெளியிட்டிருந்த அறிக்கை: பீஹார் தேர்தலில், தே.ஜ., கூட்டணிக்கு எதிராகவே, மக்கள் ஓட்டளித்துள்ளனர். ஆனால், ஓட்டு எண்ணிக்கையில் நடந்த மோசடியால், அது மாற்றப்பட்டுவிட்டது. பொம்மலாட்ட அரசின் பதவியேற்பு விழாவை, எங்கள் தலைமையிலான, மெஹா கூட்டணி புறக்கணிக்கும்.உதவாத இரு கட்சிகளால், மக்களுக்கு உதவாத அரசு அமைக்கப்படுகிறது. முதல்வராகப் பதவியேற்கப் போகிறவர் பலவீனமானவர். பா.ஜ., விடம் முதல்வராக தகுதியானவர் யாரும் இல்லை, இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE