ஐதராபாத் :''கொரோனா வைரஸ் காலத்தில், சர்வதேச அளவில் வர்த்தகம் செய்வதற்கு புதிய வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அதை சரியாக பயன்படுத்த வேண்டும்,'' என, வெளியுறவு அமைச்சர், ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
தெலுங்கானா தலைநகர் ஐதராபாதில் உள்ள, 'இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ்' கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் பங்கேற்றார்.அப்போது அவர் பேசியதாவது:கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கு காலத்தின்போது, வெளிநாடுகளில் தவித்த, 24 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை, 'வந்தே பாரத்' திட்டத்தின் மூலம் அழைத்து வந்தோம்.

கொரோனா வைரஸ் பரவல் நமக்கு பல படிப்பினைகளை தந்துள்ளது. அதன் தாக்கம், வரும் காலங்களில் தெரியவரும். தற்போதைய நிலையில், பொருளாதாரத்தை மீட்பதற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. கடந்த சில மாதங்களாக, நாட்டின் பொருளாதாரம் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால், சர்வதேச அளவில், பொருள்கள், 'சப்ளை' செய்வதில் பல புதிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இதை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதற்கேற்ப, நம் உற்பத்தி வசதிகளை மேம்படுத்த வேண்டும். வைரஸ் பரவலின்போது, சிகிச்சை அளிப்பதற்காக, பல வசதிகளை ஏற்படுத்தினோம். அவசர காலங்களில் மட்டுமல்லாமல், எப்போதும் இதுபோன்ற வசதிகள் கிடைக்க வழி செய்ய வேண்டும்.
பயங்கரவாதத்தை அரசின் கொள்கையாக வைத்துள்ள நம் அண்டை நாட்டால், எல்லை தாண்டிய பயங்கரவாத பிரச்னையை நாம் சந்தித்து வருகிறோம். இது குறித்து சர்வதேச அரங்கில், தொடர்ந்து நாம் குறிப்பிட்டு வந்தோம். இதன்பின் தான், பயங்கரவாதம் சர்வதேச பிரச்னை என்பதை உலக நாடுகள் புரிந்து கொண்டுள்ளன.
இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE