தமிழர்களின் பிறப்புரிமையான தாய்மொழிக் கல்வியைப் பெறுவதில் தடையை ஏற்படுத்தும் விதிகளை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், தமிழகத்தில் மீண்டும் மொழிப்போர் வெடிக்குமென எச்சரிக்கிறேன்.
- நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
'உங்களைப் போன்ற பிரிவினைவாத சக்திகளின் உச்சபட்ச எண்ணம், மொழிப்போர் தான் என்பதில், எள்ளளவும் சந்தேகம் இல்லை. எப்போது தான் திருந்தப் போகிறீர்களோ...' என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை.
நேர்மையானவர்களை கண்டால், கழக அரசுகளுக்கு பிடிக்காது போலிருக்கிறது. துணை வேந்தர் சுரப்பா ஓர் சிறந்த கல்வியாளர். அவரால், அண்ணா பல்கலைக்கழகத்திற்கும், அதன் மாணவர்களுக்கும் முன்னேற்றம் ஏற்பட்டு, தங்கள் கல்வி வியாபாரத்திற்கு நஷ்டம் வந்துவிடும் என, அக்கட்சிகள் பதற்றம் அடைகின்றன.
- தமிழக, பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்
'நேர்மையா இருக்கிறவங்களுக்கு இங்கே மரியாதை இல்லையே...' என, நினைவுப்படுத்தத் தோன்றும் வகையில், தமிழக, பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை.
மத்திய அரசு நடத்தும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தமிழ்மொழி கற்பிப்பதில் உள்ள தடங்கல்களை உடனே நீக்க வேண்டும். இதுகுறித்த, மத்திய கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
- எம்.பி., டி.ஆர்.பாலு

'தி.மு.க.,வின் கோரிக்கைகளை நிறைவேற்ற, மத்திய அரசில், தனி பிரிவை துவக்க வேண்டும் போல...' என, கூறத் தோன்றும் வகையில், தி.மு.க., பார்லிமென்ட் குழுத் தலைவரான, டி.ஆர்.பாலு எம்.பி., அறிக்கை.
ராணுவத்தில் டாங்கிகளுக்கு விடை கொடுக்கும் காலம் வந்து விட்டது. இதை, அஜர்பைஜான் - ஆர்மினியா இடையே நடந்த போரில் தெரிந்து கொள்ள முடிந்தது. ஆளில்லா விமானங்கள் குண்டுகளை வீசி, ஆர்மினியாவின் நிலப் பகுதி ஆயுதங்களை அழித்தன.
- எம்.பி., சசி தரூர்
'ஆளில்லா விமானங்கள் ஆபத்தானவையே...' என, கூறத் தோன்றும் வகையில், காங்., - எம்.பி., சசி தரூர் அறிக்கை.
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீர் என்று பல மாநிலங்களில் பட்டாசுகளுக்கு தடை விதித்திருப்பது, நமது மாநில பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர்களுக்கு பெருத்த இடியாக வந்திருக்கிறது.
- தி.மு.க., - எம்.எல்.ஏ., - ராஜா
'வருங்காலங்களில், பட்டாசுக்கு எதிர்ப்பு இன்னும் கடுமையாக இருக்கும் போலிருக்கிறதே...' என, கூறத் தோன்றும் வகையில், தி.மு.க., - எம்.எல்.ஏ., - ராஜா அறிக்கை.
'அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஹிந்தி கூடாது; இலவசக் கல்வி, உணவு, உறைவிடம் வழங்கும், 'நவோதயா' பள்ளிகள் தமிழகத்திற்கு தேவையில்லை' என்று, தி.மு.க., சொல்லும் போது, மாணவர்கள் எதை படிக்க வேண்டும் என்பதை, அரசியல் கட்சிகள் தீர்மானித்தால், சமூகத்தின் பன்முகத்தன்மை சீர்குலைந்துவிடும் என, நாங்கள் சொல்கிறோம்.
- ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார்
'இதை அனுமதித்தால், அங்குள்ள சிலரின், 'கல்வி வியாபாரத்திற்கு' பாதிப்பு ஏற்பட்டு விடும்...' என, கூறத் தோன்றும் வகையில், ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார் அறிக்கை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE