தீபாவளி கொண்டாடிய உற்சாகத்துடன், ஸ்வீட், காரம் சகிதம் மித்ராவின் வீட்டுக்கு சென்றாள் சித்ரா.
ஹாய்... மித்து, இந்த வருஷம் தீபாவளி எப்படி?''
''கொரோனா பயமில்லாம சூப்பரதான் போச்சு,'' என கூறிய மித்ரா, காபி கலந்து கொடுத்தாள்.
மித்ரா டிவி.,யை 'ஆன்' செய்தவாறே, ''இந்த முறை தீபாவளிக்கு, விஜிலென்ஸ் போலீஸ்காரங்க ரெய்டு தான், அதிரிபுதிரி சரவெடியா இருந்துச்சு போல,'' என்றாள்.
'உண்மைதான்டி. ஆனா, லிங்கேஸ்வரர் ஊர் தாலுகா ஆபீசில் மட்டும் புஸ்வானமாயிடுச்சு…''
''ஏங்க்கா., அங்கதான், தாசில்தார் ஜீப்பில் இருந்து, 60 ஆயிரம் ரூபாய் வரை சிக்கிடுச்சே,''
''பணம் பிடிச்சது உண்மைதான்டி. இதிலொரு முக்கியமான விஷயம் என்னன்னா... விஜிலன்ஸ் போலீஸ் ரெய்டு வர்ற விஷயம், காலையிலயே சம்பந்தப்பட்ட ஆபீசருக்கு தெரியுமாம்,''
அதிர்ச்சியடைந்த மித்ரா, ''என்னக்கா சொல்றீங்க?'' என்றாள்.
''ரெய்டு நடந்த அன்னைக்குத்தான், 'சாந்த'மான அதிகாரிக்கு டிரான்ஸ்பர் ஆர்டரும் வந்துச்சு. 'பேர்வெல் பார்ட்டி' வைக்க ஊழியர்ங்க ரெடியாகிட்டு இருந்தாங்க. ரெய்டு வந்ததால், பார்ட்டி கேன்ஸல் ஆகிடுச்சு,''
''ரெய்டு மேட்டர் கசிஞ்சதால, தனது உறவுக்கார பையனிடம், மொத்த கலெக்ஷன் தொகையை கொடுத்து 'சேப்டி' பண்ணிட்டதாகவும் ஒரு தகவல் உலா வருது. இதேமாதிரி, கல்லா கட்டுறதுல கைதேர்ந்த, 'நீள அகல' ஆபீசில் வேல பாக்கிறவங்களும், நாலு மணிக்கே எஸ்கேப் ஆயிட்டாங்களாம்,''
''அடக்கொடுமையே. யார நம்புறதுன்னு தெரியலையே. ரெய்டு பத்தின விஷயத்தை கசியவிட்ட கறுப்பு ஆடு யார்ன்னு, அதிகாரிங்க கண்டுபிடிச்சு, நடவடிக்கை எடுத்தா தேவலை,'' என ஆதங்கப்பட்ட மித்ரா, ''அக்கா, இதே மாதிரி, ரெய்டு விஷயம் தெரிஞ்சு, வடக்கால ஸ்டேஷன் போலீஸ், 'கிப்ட் பாக்ஸ்' எல்லாத்தையும், பக்கத்தில ஒரு மண்டபத்தில பதுக்கிட்டாங்களாம்,''
''அடக்கொடுமையே,'' சிரித்த சித்ரா, 'அல்வா'வை சாப்பிட்டு, ''ஏய், சூப்பரா இருக்கு. யார் செஞ்சது,'' என்றதற்கு, ''உடுமலையிலிருந்து சித்தி கொண்டு வந்திருந்தாங்க,'' பதிலளித்தாள் மித்ரா.
''டிரான்ஸ்பர் வந்தும், இடத்தை காலி செய்ய மனசில்லமா பலரும் தவிக்கிறாங்க மித்து''
''யாரை சொல்றீங்க?''
''சிட்டியின் மத்தியில இருக்க ஸ்டேஷன் ஆபீசர் தான். டிரான்ஸ்பர் போட்டும், போக மனசில்லாம, அரசியல் அதிகாரமிக்க நபரின் செல்வாக்க 'யூஸ்' செஞ்சு, அங்கேயே இருக்க 'ட்ரை' பண்றாராம்,''
''ஆ... மறந்தே போச்சு,'' என்ற சித்ரா, ேஹண்ட்பேக்கில் இருந்து, 'ஜெய்சங்கர் கிப்ட்ஸ்' என அச்சிடப்பட்டிருந்த பார்சலை, ''உனக்காக, வாங்கிட்டு வந்த தீபாவளி பரிசு,'' மித்ரா கையில் கொடுத்தாள்.''ரொம்ப தேங்ஸ்ங்க்கா'' என்ற மித்ரா, ''இந்த தீபாவளிக்கு, அவிநாசி தொகுதி ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்குத்தான் ஜாக்பாட்..'' அடுத்த மேட்டருக்கு தாவினாள்.
''அடடே... அப்படி என்ன கவனிப்பு?''
''கட்சி ரீதியாக, திருப்பூர் மாவட்டத்துடன் இருந்த, அவிநாசி தொகுதி, கோவை புறநகர் வடக்கு மாவட்டத்துடன் இணைச்சுட்டாங்க. இதனால், கட்சிக்காரங்க ரொம்பவே அப்செட்டாகி, 'எங்கள திருப்பூரோடயே சேர்த்துடுங்க'ன்னு, அடம் பிடிச்சாங்க,''
''அப்பதான், புதுசா பொறுப்பேற்ற மா.செ., தலைமையில, கட்சி நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு கொடுத்து அசத்திட்டார். ஒவ்வொரு ஒன்றிய நிர்வாகிக்கும், ஒரு லட்சம், பேரூராட்சிக்கு, 50 ஆயிரம், கிளை செயலாளருக்கு, 5 ஆயிரம்... அப்புறம், பிரதிநிதிக்கு தனியான்னு, சும்மா அள்ளி வீசிட்டாங்க,''
''பணம் மட்டுமில்லாம, வேட்டி, சேலையும் கொடுத்ததால, திக்குமுக்காடிய கட்சிக்காரங்க, இந்த மாதிரி யாரும் கவனிச்சது இல்லைன்னு, புல்லரிச்சு போயிட்டாங்களாம். ஓ.கே., நாங்க, இங்கயே இருக்கோம். வர்ற எலக் ஷனில், வேல பாக்கிறோம்ன்னு சபதம் கூட எடுத்துகிட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.
''எலக் ஷன் வர்றதால, இதெல்லாம், அந்த மாவட்ட வி.ஐ.பி.,யோட 'கவனிப்பு'தான்னு நினைக்கிறேன்,''
''இங்க இப்படின்னா... சிட்டிக்கு புதுசா நியமிக்கப்பட்ட பொள்ளாச்சிக்காரரை பார்க்க, 'சவுத் வி.ஐ.பி.,' போயிருக்காரு. ரொம்ப நேரம் காக்க வைச்சதால கடுப்பான அவரு, 'என்னையே இப்படி காக்க வைக்கிறீங்களே'ன்னு, கோவப்பட்டுட்டாராம்'' என்றாள் மித்ரா.
''அரசு பணத்திலயே கமிஷன் பாக்கிற அதிகாரி மேல, ஊராட்சி செக்கரட்டரிங்க செம கடுப்புல இருக்காங்க,'' என சித்ராவின் பேச்சு யூனியன் பக்கம் திரும்பியது.
''யாரைங்க்கா சொல்ற...''
''அங்கீகாரம் இல்லாத சைட்டுக்கு, 'அப்ரூவலுக்கு' கட்ற பணத்துல, ஊராட்சிக்கு சேர வேண்டிய பங்கை பிரிச்சு கொடுக்கணுமாம். அந்த பணத்தை, பஞ்சாயத்துக்கு தர்றதுக்கு, ஊராட்சி செக்கரட்டரிங்ககிட்ட, கமிஷன் வாங்கிட்டு தான், அந்த ஆபீசரு தர்றாராம்,'' என்றாள் மித்ரா.
''அடுத்த ரெய்டு அங்கதான் போல. சரி வா மித்து. ஏ.டி., பஞ்சாயத்து ஆபீஸ் வரைக்கும் போய்ட்டு வந்துடலாம். ஆண்டிபாளையத்தில் இருக்கற என் பிரண்டோட வீட்டு வரி கட்டறது சம்மந்தமா முருகேசனை பார்த்துட்டு வரலாம்,'' எனக்கூறிய படி இருவரும் கிளம்பினர்.
ஏ.டி., ஆபீசுக்கு இருவரும் சென்ற நிலையில், கரைவேட்டி சகிதமாக சிலர் வந்து போயினர்.
''பார்த்தால், உடுமலை ஆட்கள் மாதிரி தெரியுது. ஏதாவது, வேலையா வந்திருப்பாங்க என்ற சித்ரா, ''கொஞ்ச நாளைக்கு முன்னாடி மினிஸ்டரோட, உதவியாளர் கடத்தலுக்கான காரணம் என்னன்னு தெரிஞ்சுதா?'' என்றாள்.
''ம்... தெரியலீங்க!''
''ஒரு லேடிக்கு, கவர்ன்மென்ட் வேலை வாங்கித்தரேன்னு சொல்லி, பல லட்சம் ரூபாய் பணம் கைமாறினதுதான் காரணம்னு சொல்றாங்க. போலீஸ், 'கேஸ்' ஆனதால, கொடுத்த பணத்தை வாங்க முடியாம பணத்தை இழந்தவங்க தவிக்கிறாங்களாம். இதனை, உளவுப்படை போலீஸ், மேல வரைக்கும் கொண்டு போயிட்டாங்க...'' என்றாள் சித்ரா.
''அக்கா... நீங்க இத சொன்னதும், எனக்கு ஒரு மேட்டர் ஞாபகத்துக்கு வந்திடுச்சு. மாவட்ட ஒற்றர்படை பிரிவுக்கு, டிரான்ஸ்பராகி வந்த ஒருத்தர் மேல, ஏகப்பட்ட 'கரப்ஷன் கம்ப்ளைண்ட்' இருக்காம். அவர எப்படி, இதிலேன்னு... கூட இருக்கறவங்களே புலம்பறாங்களாம்,'' என்றாள் சித்ரா.
''மிஸ்டர் பூபதி உள்ளே வாங்க,'' என்ற அலுவலக ஊழியரின் அழைப்பை ஏற்று, வாசலில் காத்திருந்த ஒருவர் உள்ளே சென்றார்.
அப்போது, போலீஸ் கமிஷனரின் ஜீப், அலுவலக வளாகத்தில் நுழைந்ததை பார்த்த, மித்ரா, ''கமிஷனர் காதுக்கு விவகாரம் போச்சுன்னா, நடவடிக்கை எடுப்பார்ன்னு நினைக்கிறேன்,''
''எந்த விவகாரம்டி''
''சிட்டியில, நெறைய இடத்துல கஞ்சா சேல்ஸ், சர்வ சாதாரணமா நடக்குது. சப்ளை பண்ற ஆள பிடிக்கப்போகும் போது, அந்த ஆசாமி 'எஸ்கேப்' ஆகிடுறாராம். யாரோ ஒருத்தர், முன்கூட்டியே அவருக்கு விசுவாசமாக போட்டு குடுத்திடறாங்களாம்,''
''இந்த மாதிரி கறுப்பு ஆடுகளை வெச்சு செய்யணும். இப்டி குறுக்கு வழியில, செல்வம் சேர்க்கிறதுல குறியா இருக்கறவங்க மீது ஏக் ஷன் கண்டிப்பா எடுக்கோணும்,'' ஆவேசமாக சித்ரா பேசி முடிக்கவும், ஊழியர் இருவரையும் பேர் சொல்லி அழைக்கவே இருவரும், சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE