புதுடில்லி :''ஜம்மு - காஷ்மீரில் எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள, 'குப்கர் உறுதிமொழிக்கான மக்கள் கூட்டணி' வெளிநாடுகளுடன் இணைந்து சதி செய்கின்றன. ''மீண்டும் வன்முறை, குழப்பங்களுக்கு வித்திட திட்டமிட்டுள்ளன,'' என, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா, கடுமையாக விளாசினார்.
உறுதிமொழி
ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, கடந்தாண்டு விலக்கிக் கொள்ளப்பட்டது. இதற்கு, அங்குள்ள அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா தலைமையில், குப்கரில் உள்ள அவரது வீட்டில், எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. பா.ஜ.,வைத் தவிர மற்ற கட்சிகள் இதில் பங்கேற்றன. அப்போது, ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து தொடர இணைந்து பாடுபட, அனைத்துக் கட்சிகளும் தீர்மானம் நிறைவேற்றின; இது, குப்கர் உறுதிமொழி என கூறப்படுகிறது.இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கூட்டம், கடந்த மாதம் நடந்தது. அப்போது, குப்கர் உறுதிமொழிக்கான மக்கள் கூட்டணி என்ற புதிய கூட்டணியை உருவாக்குவதாக, ஏழு எதிர்க்கட்சிகள் அறிவித்தன. இந்தக் கூட்டணிக்கு, காங்., ஆதரவு தெரிவித்துள்ளது.இந்நிலையில், சமூக வலைதளத்தில் அமித் ஷா, நேற்று பல்வேறு பதிவுகளை வெளியிட்டார்.
அதில், அவர் கூறியுள்ளதாவது:புதிதாக உருவாக்கியுள்ள, குப்கர் கூட்டம், ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில், வெளிநாடுகள் தலையிடுவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளன. இதற்காக சர்வதேச அளவில் அவை முயற்சி செய்து வருகின்றன.காங்கிரஸ் மற்றும் குப்கர் கூட்டம், ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் வன்முறை நடக்க வேண்டும்; குழப்பங்கள் ஏற்பட வேண்டும் என்ன நினைக்கின்றன.
இங்குள்ள தலித், பெண்கள் மற்றும் மலைவாழ் மக்களுக்கு கிடைத்து வரும் சலுகைகளை பறிக்க நினைக்கின்றன. அதனால் தான், இது போன்றவர்களை, நாட்டின் மற்ற பகுதிகளில் மக்கள் புறக்கணித்து வருகின்றனர்.ஜம்மு - காஷ்மீர் முன்பும், இப்போதும், எப்போதும், நாட்டின் ஒரு பகுதியாகவே இருக்கும். குப்கர் கும்பல், நம் தேசியக் கொடியை அவமதித்துள்ளது. இந்த கும்பலுக்கு காங்., ஆதரவு அளிக்கிறது என்பதை, சோனியாவும், ராகுலும் மக்களுக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
கடும் எதிர்ப்பு
அமித் ஷாவின் பேச்சுக்கு, மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாடு, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE