அண்மையில் தெலுங்கானா மாநிலத்தில், ஒரு பெண்ணை, நான்கு பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, கொன்று விட்டனர் என ஒரு வழக்கு வந்தது. சம்பந்தப்பட்ட காவல் துறை உயரதிகாரியிடம், அது ஒப்படைக்கப்பட்டு விசாரணை அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டார்.
விசாரணை அதிகாரி குற்றம் சாட்டப்பட்ட அந்த நால்வரையும் தீர விசாரித்து, அந்த சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் இடத்திற்கு அவர்களை அழைத்துச் சென்று, அந்த இடத்திலேயே நால்வரையும், 'என்கவுன்டர்' முறையில் சுட்டுக் கொன்று விட்டார்.
வழக்குப் பதிவு
நான்கு கயவர்களையும் சுட்டுக் கொன்ற அந்த அதிகாரியின் செயலை, காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை, மக்கள் அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர். 'இதுவே, நீதி, நியாயம், தர்மம், சாஸ்திரம், சட்டம்' என்றனர்.அதே போல, சில ஆண்டுகளுக்கு முன், நம் தமிழகத்திலும் ஒரு வழக்கு வந்தது. வழக்கு மாறுபட்டதாக இருந்தாலும், அதற்கான நீதி, நியாயம், ஒரு போலீஸ் உயரதிகாரியாலேயே வழங்கப்பட்டது என்பதே கவனிக்கப்பட வேண்டியதாகும்.
மதுரையில் நடந்த நிகழ்ச்சி அது.பெற்ற மகளைத் தகப்பனே பெண்டாடியதை அறிந்து பெண்ணின் தாய், அந்தப் பெண்ணின் தகப்பனாகிய தன் கணவனை, கிரிக்கெட் மட்டையால் இடுப்புக்கு கீழே அடித்துக் கொன்று விட்டாள் என்பதே வழக்கு.
மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளரிடம் அந்த வழக்கு வந்தது. 'கயவனாகிய கணவனிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே அந்தப் பெண் அவ்வாறு செய்தாள் என்பது என் முடிவு' எனக் கூறி, கொலைக்குற்றம் சாட்டப்பட்டிருந்த அந்த பெண்ணை வழக்கிலிருந்து விடுவித்தார், கண்காணிப்பாளர். வழக்குப் பதிவு செய்து நீதி மன்றம் கொண்டு செல்லவில்லை.கண்காணிப்பாளருக்கு இந்த அதிகாரம் உண்டா என, மாவட்ட ஆட்சியர் கேள்வி எழுப்பினார். உண்டு என்பதே உறுதியானது.இந்த இரண்டு காவல் துறை அதிகாரிகளின் செயல்கள் வழக்கு மன்றத்தைத் தாண்டி மக்கள் மன்றத்தில் விவாதிக்கப்பட்ட போது, அவர்கள் செய்தது முற்றிலும் சரியே என்பதாக முடிவு எட்டப்பட்டது.
மதுரையிலிருந்து அப்படியே இராமநாதபுரம் செல்வோம். ஏறக்குறைய, 300 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்போம்.கி.பி., 1713ல், இராமநாதபுரம் அரசராக முடிசூட்டிக் கொண்ட முத்து ரகுநாத சேதுபதிக்கு இரண்டு பெண்கள். அவ்விருவரையும் தண்டத் தேவர் என்ற பெயருடையவருக்கு மணம் செய்து கொடுத்து, அவரை ராமேஸ்வரம் தீவுக்கு கவர்னராக நியமித்தார் சேதுபதி.இராமேஸ்வரத்திற்கு சேது பாதை வழியாக நடந்து வருவோர், மண்படம் தோணித்துறையை அடைந்து, அங்கிருந்து படகு மூலம் ராமேசுவரம் சென்று, தங்கள் புனிதப் பயணத்தை முடிப்பர்.
மரண தண்டனை
தோணித்துறையிலிருந்து இராமேஸ்வரம் செல்ல படகில் கட்டணம் கிடையாது. இது, சேது மன்னர்கள் காலங்காலமாக செய்து வந்த சிவ புண்ணியச் செயலாகும்.இதை நன்கு அறிந்திருந்தும், தண்டத்தேவர் பயணிகளிடம் சிறிய தொகையை கட்டணமாக வசூலித்தார். மருமகனின் இந்தச் செயலை அறிந்த சேதுபதி மன்னர், தம் மருமகன் சிவதுரோகம் செய்து விட்டார் என தீர்மானித்து, அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றிவிட்டார்.
சேதுபதியின் இந்தச் செயலைக் கொடூரம் என்பதா; கொலை என்பதா; நீதி என்பதா?
மன்னரின் செயலை நீதி என்றே மக்கள் முடிவு செய்து, அதன் பின், 'மனுநீதி சேதுபதி' என மன்னரை அழைக்கத் தொடங்கினர்.
மன்னரின் இந்தச் செயலுக்குப் பின், அவருடைய பெயருக்கு முன், 'மனுநீதி' என்ற பட்டப்பெயர் ஒட்டிக் கொண்டது. மக்கள் கொடுத்த பட்டம் இது.மக்கள் மனத்தில், 'மனுநீதி' என்னும் பெயர் எதன் அடிப்படையில் குடிகொண்டது என்பது கேட்க வேண்டியதும், அறிய வேண்டியதும் அவசியம். அது பற்றிய சிறிது பார்ப்போம்.சிலப்பதிகாரத்தில், ஒரு சோழ மன்னனை, இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். இம்மன்னனின் இயற்பெயர் தெரியாது.அவன் கடைப்பிடித்த நீதி முறையை வைத்து, அவனை மனுச்சோழன் என, சிலப்பதிகாரக் காலத்திற்கு முன்பே, மக்கள் பெயரிட்டு வழங்கியுள்ளனர்.
அவனுடைய பெற்றோர் இட்டபெயரா அது எனில் அதுவும் இல்லை என்கிறார் சேக்கிழார் பெருமான். பின் எவ்வாறு அந்தப் பெயர் வந்தது என்றால், 'மனுப்பெற்ற நீதி தன் பெயராக்கினான்' என்பது சேக்கிழார். அதாவது, சிவனுடைய குல முதல்வனாக, 'மனு' என்ற பெயருடைய அரசன் ஒருவன் இருந்தான., அவன் பின்பற்றிய நீதி முறையை, சிவன் செலுத்தியதால், மனு நீதிச் சோழன் என்று மக்களால் அழைக்கப்பட்டான் என்பது சேக்கிழார் கருத்து.ஒரு காலத்தில், சோழன் குடியில் மனு என்ற பெயரில் மன்னனாக இருந்த ஒருவன் செலுத்திய ஆட்சி முறை, நீதி வழங்கிய முறை, மனு ஆட்சி என்றும் மனுநீதி என்றும் வழங்கியது. அதுவே பின் வந்தேர்க்குக் குல வழக்கமாக வந்தது.
வழிவழியாக வழக்கத்தில் வரும் நீதி முறை அது. ஒருவரால் எழுதி வைக்கப்பட்டதன்று. அதனால் தான், பெருமாள் சேக்கிழார், வழிவழியாக வரும் மனுமுறையை, 'தொன்மனுநுால்' என்றும் சிலரால் எழுதி வைக்கப்பட்ட நீதிமுறையை, 'தொடை மனு' என்றும் தனித்தனியாகப் பிரித்துக் காட்டுகிறார்.தெலுங்கானா காவல் அதிகாரியும், மதுரைக்காவல் அதிகாரியும், சேதுபதி மன்னரும், மனு நீதிச் சோழரும் நடைமுறைப்படுத்தியதே உண்மையான மறுக்க முடியாத நீதிமுறையாகும். ஏனெனில், அவர்கள் நடைமுறைப்படுத்திய நீதி, மன உணர்வின் அடிப்படையில், அதாவது மனச்சாட்சியின் அடிப்படையில் எடுத்ததாகும்.
சாத்திரம்
இத்தகைய மன உணர்வு, மனிதர்களாயினும், மாட்டிற்காயினும் சமமாக இருக்க வேண்டும் என்று எழுதி வைக்கப்பட்ட நீதி நுாற்கள் இருந்துள்ளன. அந்த நீதி நுால்களையும் மனுதர்ம சாத்திரம் என்ற பெயரில் வழங்குவது நம் வழக்கமாக இருந்துள்ளது.இவற்றை இயற்றியோர் ரிஷிகள். மனு என்ற பெயரால் பலர் இருந்திருக்க வேண்டும். அது இயல்பானதே. தாத்தாவின் பெயரைக் கொண்டிருப்பதால், பேரன் என்ற சொல் வழக்கு இன்றும் நம் குல வழக்கமாக இருப்பது நாம் அறிந்ததே!அந்த வகையில், 'அவரவர் வாழ்ந்த காலத்திற்கேற்ப, அவர்கள் சாத்திரம் எழுதியிருப்பவர். அவருள்ளும், ஆதி மனு வாழ்ந்த காலத்தில், ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்ற வகையில் அவர் எழுதியிருக்க வாய்ப்பில்லை' என, திரு.வி.க., குறிப்பிடுவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பதினான்கு மனு அரசர்கள் பெயரையும், ஒரு மனு அரசன் வாழும் கால அளவு பற்றியும் அவர்கள் காலத்து வாழ்ந்த ரிஷிகள் இன்னின்னார் என்பது பற்றியும், அபிதான சிந்தாமாணியில் பார்க்கலாம். அந்தக் குறிப்புகள், இந்த கால பகுத்தறிவு ஏற்காது.எனக்கு சமஸ்கிருதம் தெரியும். சமஸ்கிருதத்தில் எழுதியுள்ள மனுதர்ம நுால்கள் அதிகம் படித்தவனில்லை. சில இடங்களில் உள்ள சில சுலோக செய்திகள் தெரியும். என் அறிவுக்கு எட்டிய அளவில், எந்த ரிஷியும் தாம் ஆக்கிய தரும சாஸ்திரத்தில், தமக்குகந்த மதத்தின் பெண்கள் விபசாரிகள் எழுதியிருக்க மாட்டார்.
அவ்வாறு எழுதியிருப்பாரேயானால், அவர் தம்மையும் விபசாரியின் மகன் என ஒப்புக் கொண்டவர் ஆவார். ஆதலால் அது சாத்தியமில்லை.சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதாக சொல்லப்படும் மூல நுாலின் ஆதாரம் காட்டாமல், ஹிந்து மதத்தை இழிவுபடுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில், மதம் மாற்றும் மிஷினரிகளால் அனுப்பப்பட்ட ஓர் ஆங்கிலேயன் எழுதியதை எடுத்து வைத்து பேசுவதை ஏற்க முடியாது.
வெறுப்பு
அவ்வாறு பேசிய, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தன்னை ஒரு ஹிந்து என்று எழுத்துப்பூர்வமாக ஒப்புக் கொண்டு, எழுதி கொடுத்ததை கொண்டே தற்போது பார்லிமென்ட் உறுப்பினராக இருக்கிறார். ஆக, அவர் சட்டப்படி ஓர் ஹிந்துவே!
சனாதனம், தர்மம் ஆகியவற்றை அடிக்கடி பயன்படுத்தும் பிராமணர்கள் மீது கொண்ட வெறுப்பே, திருமாவளவனை அவ்வாறு பேச துாண்டுகிறது.ஹிந்து பெண்கள் விபசாரிகள் என்று சொல்லப்படுகின்றனர் என கூறும் திருமாவளவனும், ஓர் ஹிந்து பெண்மணியின் வயிற்றில் தான் பிறந்துள்ளதால், எவ்வளவு பெரிய பழியை அவர் சுமக்கிறார் என்பதை எண்ணி, வேதனைப்படாமல் இருக்க முடியாது.அவ்வளவில் அவர் மகிழ்வாரேயானால், நம்மால் ஏதும் சொல்ல முடியாது; செய்ய முடியாது!
எஸ்.வேதாந்தம்,
சர்வதேச முன்னாள் செயல் தலைவர்,
விஷ்வ ஹிந்து பரிஷத்.
தொடர்புக்கு: இ - மெயில்: svedantam1@gmail.com
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE