புதுடில்லி: புத்தாண்டிலிருந்து, தொலைதொடர்பு நிறுவனங்கள், தொலைபேசி அழைப்புகள் உள்ளிட்டவற்றுக்கான கட்டணத்தை, 15- - -20 சதவீதம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன.
கடுமையான நிதி நெருக்கடிகள் காரணமாக, நிறுவனங்கள் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.இதை உறுதி செய்வது போல், வோடபோன் ஐடியா நிறுவனம், பிற நிறுவனங்களுக்கு முன்னதாக, இந்த ஆண்டு இறுதியிலோ, அல்லது, புத்தாண்டு துவக்கத்திலோ கட்டணத்தை அதிகரிக்கும் என தகவல்கள் கசிந்ததை அடுத்து, சந்தையில் நேற்று இந்நிறுவன பங்குகள் விலை அதிகரித்தது.
வோடபோன் ஐடியாவை தொடர்ந்து, பார்தி ஏர்டெல் நிறுவனமும் கட்டண உயர்வை அதிகரிக்கும் என தெரிகிறது.ஆனாலும், இந்த இரண்டு நிறுவனங்களும், ரிலையன்ஸ் ஜியோ கட்டண விஷயத்தில் எத்தகைய முடிவை எடுக்கும் என்பதை அறிய காத்திருக்கின்றன.
இது குறித்து, இத்துறையை சார்ந்த உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:நிதி நெருக்கடிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் சரிவு உள்ளிட்ட காரணங்களால், கட்டணத்தை உயர்த்தாமல் சமாளிப்பது கடினம் என்ற முடிவுக்கு சில நிறுவனங்கள் வந்துள்ளன.குறிப்பாக, வோடபோன் ஐடியா, இரண்டாவது காலாண்டு அறிவிப்பின்போதே, கட்டண உயர்வு குறித்த சிக்னல்களை வெளியிட்டது.பார்தி ஏர்டெல் நிறுவனமும் கட்டண அதிகரிப்புக்கு ஆதரவாகவே இருக்கிறது. ஆனால், கட்டண உயர்வை முதலில் அறிவிக்க அது தயங்குகிறது.
வோடபோன் ஐடியா, ஏர்டெல் ஆகிய இரு நிறுவனங்களும், இப்போதைய கட்டண விகிதங்கள் தாக்குப்பிடிக்கும் வகையில் இல்லை என கருதுகின்றன.இதற்கிடையே, தொலைதொடர்பு நிறுவனங்களுக்கான, கட்டண விகிதத்தை நிர்ணயிக்கும் முயற்சியில் அரசு உள்ளது. அரசு, கட்டணத்தில் கட்டுப்பாடுகளை விதித்தாலும் கூட, நிறுவனங்கள் கட்டண உயர்வை அறிவிக்கவே செய்யும் என்றுதான் தோன்றுகிறது.இதற்கு முன்னதாக, தொலைதொடர்பு நிறுவனங்கள், கடந்த ஆண்டு டிசம்பரில் கட்டண உயர்வை அறிவித்தன. இப்போது, மீண்டும் அத்தகைய முயற்சியில் இறங்கி இருக்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
பங்கு விலை அதிகரிப்பு
வோடபோன் ஐடியா நிறுவனம், கட்டணத்தை அதிகரிக்க கூடும் என செய்திகள் பரவிய நிலையில், இந்நிறுவன பங்குகள் விலை, நேற்றைய வர்த்தகத்தின் போது, கிட்டத்தட்ட 10 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது. மும்பை பங்குச் சந்தையில், நேற்றைய வர்த்தகத்தின் துவக்கத்தில், வோடபோன் ஐடியா நிறுவன பங்குகள் விலை, 9.98 சதவீதம் அதிகரித்து, 10.02 ரூபாயாக உயர்ந்தது. இருப்பினும், வர்த்தகத்தின் முடிவில், 1.10 சதவீதம் அதிகரித்து. 9.20 ரூபாயில் நிலைபெற்றது.பார்தி ஏர்டெல் நிறுவனப் பங்குகள் விலையும், துவக்கத்தில், 494.95 ரூபாயை தொட்டு, வர்த்தகத்தின் இறுதியில், 484.50 ரூபாயில் நிலைபெற்றது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE