புதுடில்லி:'டில்லியில், கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், ஊரடங்கு பிறப்பிக்கும் அதிகாரம் வழங்க வேண்டும்' என, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மூன்றாம் கட்ட அலைடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு அமைந்துள்ளது.டில்லியில், கொரோனா பரவலின் மூன்றாம் கட்ட அலை பரவி வருவதால், பாதிப்பும், இறப்பும் அதிகரித்துள்ளன. இது குறித்து, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: டில்லியில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள் கடுமையாக உழைத்து வருகின்றன. ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மைய இடத்தில், 750 படுக்கை வசதி செய்து கொடுத்து, மக்களுக்கு உதவியுள்ள மத்திய அரசுக்கு நன்றி.
கொரோனா பரவல் குறைந்ததால், ஊரடங்கு தளர்த்தப்பட்டு, திருமண நிகழ்ச்சிகளில், 200 பேர் கூடுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. சமூக இடைவெளிஆனால், மக்கள் முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் உள்ளதால், கொரோனா மீண்டும் அதிக அளவில் பரவி வருகிறது. எனவே, திருமண நிகழ்ச்சியில், 50 பேருக்கு மட்டும் அனுமதி அளிப்பதற்கான புதிய உத்தரவை பிறப்பிக்க கோரி, டில்லி கவர்னருக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்.
கொரோனா பரவலுக்கு, மக்கள் அதிகம் கூடும் சந்தைகளும் காரணமாக உள்ளன. எனவே, முக்கிய சந்தைகளில் சில நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கும் அதிகாரத்தை, டில்லி அரசுக்கு, மத்திய அரசு வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். இதற்கிடையே, ''டில்லியில் ஊரடங்கை மீண்டும் அமல்படுத்த வாய்ப்பில்லை,'' என, அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE