மாமல்லபுரம் : கடலுார் கடற்பகுதியில் அமைக்கப்பட்ட, கடலடி மணல் அணை வீணாகி, மீண்டும் கடலரிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த அணைக்காக, 20 கோடி ரூபாயை, அதிகாரிகள் வீணடித்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகில், கடலுார் உள்ளது. இங்கு, பெரியகுப்பம், சின்னகுப்பம், ஆலிகுப்பம் என, மீனவர் பகுதிகள், 2 கி.மீ.,க்குள் உள்ளன. ஆபத்து இப்பகுதிகளில் கடலரிப்பு ஏற்பட்டதால், கடற்கரை மணல்பரப்பு அழிந்து, படகுகள் நிறுத்த இடமில்லாமல், மீனவர்கள் சிரமப்பட்டனர். வசிப்பிட பகுதிக்கும், நாளடைவில் ஆபத்து உள்ளது. இதற்கிடையே, பெரியகுப்பத்தில் அமைந்துள்ள மீன் இறங்குதளம், கடலரிப்பால் கடலில் மூழ்கும் ஆபத்திற்குள்ளானது.
எனவே, அரிப்பை தடுக்க, மத்திய புவி அறிவியல் துறையின், சென்னை, தேசிய கடலோர ஆய்வு நிறுவனம், 'டைக்' எனப்படும், கடலடி மணல் அணை அமைக்க, நவீன தொழில்நுட்ப முறையை பயன்படுத்தியது.தலா, 25 மீ., நீள ஜியோ சிந்தடிக் உருளைகளில், சுத்திகரிப்பு மணல் நிரப்பப்பட்டது. 400 மீ., ஆழ பகுதியில், குறிப்பிட்ட இடைவெளியுடன், 2 கி.மீ., நீளத்திற்கு நிலைநிறுத்தி, அணை அமைப்பு உருவாக்கப்பட்டது.ராட்சத அலைகள், கரை பகுதிக்கு சீற்றத்துடன் கடக்கும்போது, இடையில் குறுக்கிடும், அணையில் மோதி, சீற்றம் கட்டுப்பட்டு, அரிப்பும் ஏற்படாது என்பதே, இத்தொழில்நுட்பம்.தமிழக மீன்வளத் துறை நிதியுதவி, 20 கோடி ரூபாய் மதிப்பில், 2016 - 2018ல் திட்டப் பணிகள் நடந்து, 2019 ஜனவரியில், மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், இதை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.துவக்கத்தில் மட்டுமே, அணை பயன்பட்டு, தற்போது முற்றிலும் வீணாகி, மீண்டும் கடலரிப்பு ஏற்பட்டு, கடற்கரை அழிந்து வருகிறது.அழுத்தம்இது குறித்து, பெரியகுப்பம் மீனவர்கள் கூறியதாவது:கடலரிப்பை தடுக்க, துாண்டில் வளைவு அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக வலியுறுத்தினோம். இது அமைந்தால், அரிப்பை தடுத்து, துாண்டில் வளைவும் நிலையாக இருந்திருக்கும்.மீன் இறங்கு தளத்தை பாதுகாக்க, மீன்வளத் துறை ஏற்பாட்டில், ஓஷன் டெக்னாலஜி நிறுவனம், டைக் அமைத்தது.ஜியோ குழாயில், கடற்பகுதி, பருத்த மணலையே நிரப்ப வேண்டும். ஆனால், சிறுமணலே நிரப்பப்பட்டது.இதனால், அலையின் அழுத்தம் தாங்காமல், குழாய் மணல் வெளியேறி, குழாய், தரையோடு தரையாக படிந்து, வீணானது.இந்த கடலரிப்பால், மீன்வள, நிறுவன அதிகாரிகளே பயனடைந்தனர். நாங்கள் பயன்அடையவில்லை.இவ்வாறு, அவர் கூறினர்.வீணானது தடுப்பு அரண்மீனவ மேம்பாடு கருதி, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில், மீன்வளத் துறை, எட்டு ஆண்டுகளுக்கு முன், மீன் இறங்குதளம் அமைத்தது. அரசுத் துறை இடம் இன்றி, இவ்வூர் மீனவர்களின் இடத்தில் அமைக்கப்பட்டது.மீன் ஏலம், வலைபின்னல் உள்ளிட்ட கட்டடங்கள் மட்டும், மூன்று கோடி ரூபாயில், முதலில் கட்டப்பட்டது. அடுத்து, மீன் பதப்படுத்தல், குளிர்பதன கிடங்குகள் உள்ளிட்டவை, இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க திட்டமிட்டு, கடலரிப்பால் கைவிடப்பட்டது.கடலரிப்பால், வளாக சுற்றுச்சுவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டு, கட்டடங்களும் சேதம்அடைந்தன. கட்டட பாதுகாப்பு கருதி, மீன்வளத்துறை, 2015ல், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், கடற்கரையில், தடுப்பு அரண் அமைக்கப்பட்டது. இத்தடுப்பும் சீரழிந்து வீணானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE