சென்னை:''சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என, தமிழ் பாரம்பரிய கலைகளுடன் வரவேற்பு அளிக்கப்படும்,'' என, தமிழக, பா.ஜ., பொதுச் செயலர் நாகராஜன் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:சென்னை சேப்பாக்கத்தில், கலைவாணர் அரங்கில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க, வரும், 21ல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிறார்.பிரதமர் மோடி தலைமையில், இரண்டாவது முறையாக மத்திய அரசு பொறுப்பேற்ற பின், முதல் முறையாக, அமித் ஷா சென்னைக்கு வருகிறார். அவரது வருகை, தமிழக பா.ஜ.,வினருக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் அமித் ஷா, எங்கள் கட்சியின், மாநில, மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார். அப்போது, சட்டசபை தேர்தல் வெற்றிக்கான வியூகங்களை வகுத்து கொடுப்பார் என, எதிர்பார்க்கிறோம். அதன்படி செயல்பட்டு வெற்றிக்கனியை, பிரதமர் மற்றும் அமித் ஷாவிடம் ஒப்படைப்போம்.
சென்னைக்கு வருகை தரும் அமித் ஷாவுக்கு, எங்கள் கட்சியின் மாநில தலைவர் முருகன் தலைமையில், விமான நிலையத்தில் இருந்து, கலைவாணர் அரங்கம் வரை, ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் என, தமிழ் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளோம். அதற்கு அனுமதி கோரி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE