தமிழகத்தில் ரவுடிகளின் ராஜ்யம் மீண்டும் வேண்டுமா... சிந்தியுங்கள்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் ரவுடிகளின் ராஜ்யம் மீண்டும் வேண்டுமா... சிந்தியுங்கள்

Added : நவ 17, 2020 | கருத்துகள் (2)
Share
சுதந்திரம் பெற்ற பின், மற்ற மாநிலங்கள் வளர்ச்சி அடையாமல் இருந்ததோ என்னவோ, காமராஜர், ஓமந்துாரர், ராஜாஜி உள்ளிட்ட நல்ல தலைவர்கள், வளர்ச்சிக்கான விதையைப் போட்டதால், இன்று தமிழகம், அடிப்படைக் கட்டமைப்புகளில் நல்ல நிலையில் உள்ளது. இன்றும் வட மாநில சுற்றுப் பயணம் செய்து வருபவர்கள், அங்கே உள்ள நிலைமையைப் பார்த்த பின், இந்த உண்மையை மனதார ஒப்புக் கொள்வர்.மேற்படி

சுதந்திரம் பெற்ற பின், மற்ற மாநிலங்கள் வளர்ச்சி அடையாமல் இருந்ததோ என்னவோ, காமராஜர், ஓமந்துாரர், ராஜாஜி உள்ளிட்ட நல்ல தலைவர்கள், வளர்ச்சிக்கான விதையைப் போட்டதால், இன்று தமிழகம், அடிப்படைக் கட்டமைப்புகளில் நல்ல நிலையில் உள்ளது. இன்றும் வட மாநில சுற்றுப் பயணம் செய்து வருபவர்கள், அங்கே உள்ள நிலைமையைப் பார்த்த பின், இந்த உண்மையை மனதார ஒப்புக் கொள்வர்.

மேற்படி முதல்வர்களும், தலைவர்களும், காங்கிரசைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அதன் பிறகு ஆட்சி அமைத்த, மாற்றுக் கட்சியினருக்கு, அரசியல் செய்ய மட்டுமே பிடித்தது; சிறந்த ஆட்சி கொடுக்க அக்கறைப்படவில்லை.திராவிடர் கழகம் என, ஈ.வெ.ரா.,வின் தலைமையில் ஒன்றாக இருந்த அண்ணா துரை, கருணாநிதி ஆகியோர், ராஜாஜியை, ஈ.வெ.ரா., சந்தித்துப் பேசினார் என்ற காரணத்திற்காக, 1949ல், தி.மு.க., என தனி அணியாகப் பிரிந்தனர்.

ஆனால், 1967ல் இவர்களின் சாயம் வெளுத்தது; 'கட்சிக்குக் கொள்கையாவது, வெங்காயமாவது' என்ற ரீதியில், ராஜாஜியுடன் கூட்டணி வைத்தார் அண்ணாதுரை. அன்று துவங்கி இன்று வரை, தி.மு.க., கூட்டணி வைக்காத கட்சிகளே கிடையாது, அ.தி.மு.க.,வைத் தவிர!கருணாநிதி தலை எடுத்த பின், காங்கிரசிடமிருந்து ஆட்சியைப் பிடுங்கி, வாயில் போட்டுக் கொண்டார்.

இந்தக் கட்சியாலும், ஜெ.,யின் ஊழல் சாம்ராஜ்யத்தாலும், நமக்கு ஏற்பட்டுள்ள கதி என்ன தெரியுமா...'தமிழனைப் பார்த்தாலே, சர்க்காரியா ஊழல், ஒற்றுமை இல்லாமை, சொத்துக் குவிப்பு, 2ஜி ஊழல், எந்த ஒழுங்கு நடவடிக்கையும் இல்லாமை, ஆழ்ந்து சிந்திக்காமல் எல்லாவற்றுக்கும் உணர்ச்சி வசப்பட்டு போராட்டம் நடத்துவது, அறிவை வளர்க்க மறுப்பது, எப்போதுமே, 'மட்டை'யாகி சாலையில் படுத்துக் கிடப்பதுங்கிறது தான் நினைவுக்கு வருகிறது' என்ற பெயர் தான்!

அடிப்படைக் கட்டமைப்புகள் அனைத்தும், இத்தனை ஆண்டுகளில் சிறிது சிறிதாக வீணடிக்கப் பட்டு விட்டன. விவசாயம் மறைந்து, நீர்நிலைகள் மறைந்து, கட்டடங்கள் முளைத்து விட்டன. குடிக்கும் நீரில் சாக்கடை கலந்து வருகிறது.கோவில்கள் சிதலமடைகின்றன. பணம் விழுங்கும் முதலைகளாக கட்சிகள் இருப்பதால், மக்கள் மன நிம்மதி இன்றி அலையும் அவலம் ஏற்பட்டு விட்டது.

கடந்த, 70களில், ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் என்ற பெயரிலும், பிராமண எதிர்ப்புப் போராட்டம் என்ற பெயரிலும், பெரிய பெரிய அரிவாள் மற்றும் பளபளக்கும் கத்திகளுடன், மிக ஆக்ரோஷமாய் கத்தியபடி ரவுடிகள், சாலைகளில் ஓடி வருவர்; பொதுமக்கள் அனைவரும் வீட்டில் பதுங்கி, கதவை உள்பக்கமாய் பூட்டு போட்டு, நிசப்தமாய் நின்று வேடிக்கை பார்ப்பர். ரவுடியிசத்தை உணர்ந்த மக்கள், எம்.ஜி.ஆர்., பின்னால் அணிவகுத்து நிற்கத் துவங்கிய பின், ரவுடி என்ற பிம்பத்தையும், கடவுள் மறுப்பால் ஏற்பட்ட எதிர்மறை பிம்பத்தையும் மாற்றும் விதமாக, சத்ய சாயிபாபாவை தன் வீட்டிற்கு வரவழைத்தார் கருணாநிதி.

ஆனால், அவர் கட்சியைச் சேர்ந்தவர்களும், கூட்டணியில் உள்ள சில கட்சியினரும், வீட்டை அபகரித்துப் பிடுங்குவது, கத்தியை காட்டி மிரட்டி, நிலத்தைப் பிடுங்குவது, 'ஹிந்துக்களால் தான் நாம் இன்று வாழ்கிறோம்; நாம் தின்னும் உப்பு இவர்களுடையதே' என்ற நினைப்பே இல்லாமல் அல்லது நினைப்பு இருந்தாலும், 'இதுங்க ஏமாளிங்க... காசு கொடுத்தா ஓட்டு போடும்' என்ற சிந்தனையுடன், ஹிந்துக்களை இழிவுபடுத்தி, களவாணிக் கொள்கையுடன் கட்சி நடத்துகின்றனர்.

மாற்று மதத்தினரின் ஓட்டு, மொத்தமாகக் கிடைக்கிறது என்ற தைரியமா? கண்ணியத்தைக் காற்றில் பறக்க விட்டு, சாப்பாட்டுக் கடையில் அதிகார தோரணையில் அனைத்தையும் வாங்கிச் சாப்பிட்டு, 'காசு கொடு' எனக் கேட்டால், கட்டையால் அடிப்பது; துப்பாக்கியால் மிரட்டுவது என்பதே அடையாளம் என, ஒட்டுமொத்த தமிழகத்தின் மானத்தையே வாங்கும் வகையில், தி.மு.க.,வினர் செயல்படுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை; பின்னணி அப்படி!

ரவுடிகளின் கூடாரமாக விளங்கும் கட்சிகளுக்கு ஓட்டு போட்டு, ஆட்சியில் அமர வைத்தால், நேர்மையானவர்கள் யாருமே வியாபாரமும் செய்ய முடியாது; சாலையில் நடமாடவும் முடியாது!தற்போதும், தமிழகமெங்கும் வெட்டு, குத்து, வழிப்பறி, கொள்ளை, கொலை, திருட்டு ஆகியவை அதிகமாகி விட்டன. இதற்கு கொரோனாவைக் காரணம் சொல்வதா, ஆட்சியாளர்களைக் காரணம் சொல்வதா, எதிர்க்கட்சியினரைக் காரணம் சொல்வதா... ஆனால், 70களின் காட்சிகள் மனதில் ஓடுகின்றன!

காங்கிரசிலும் இப்போதைக்கு நல்ல தலைவர்களே இல்லை. மூப்பனார் காலத்தில், காங்கிரஸ் சற்றே தலைநிமிர்ந்து நின்றிருந்தது. அதன்பிறகு படுத்தது, எழுந்திருக்கவே இல்லை! கிட்டத்தட்ட, 50 ஆண்டுகாலமாய் தனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும் சொத்து சேர்த்து வளர்த்துள்ள, 'சிவகங்கைச் செம்மல்' தான் தற்போதைய, 'மிகப் பெரும்' தமிழக தலைவர் என்ற பெயரில் கோலோச்சுகிறார்.மற்ற தலைவர்கள் யாருமே, டில்லி பக்கம் தலை வைத்துப் படுக்காதபடி பார்த்துக் கொண்ட பெருமை இவருக்கு உண்டு!

பா.ஜ.,வைப் பாருங்கள்... நேற்று வரை அமைதியாக, மூலையில் அமர்ந்திருந்தவர்கள், இளம் தலை வந்ததும், வீறு கொண்டு வேல் யாத்திரை செல்கின்றனர். 'அடுத்த சட்டசபையில் நாங்கள் கண்டிப்பாக இடம் பெறுவோம்' என, நம்பிக்கை வாக்குறுதி கொடுத்து, மக்களை உசுப்பேற்றுகின்றனர்!இந்த வீரம், காங்கிரசில் உள்ள இளம் தலைவர்களிடம் காணோமே?

இளசுகளே... கோஷ்டி கானம் போடுவதை விடுத்து, சற்று நிமிர்ந்தெழுந்து, ஓரணியில் திரண்டு, மூன்றாம் கூட்டணி அமைக்க முயலுமாறு, தலைமைக்கு எடுத்துச் சொல்லுங்கள். இத்தனை ஆண்டுகளாக, தி.மு.க., மீது சவாரி செய்த அவலம் போதும்!

- துர்வாசர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X