சென்னை:ஜெயலலிதா நினைவிடத்தில், அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா அமைக்க, 12.32 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு, சென்னை மெரினாவில், 58 கோடி ரூபாயில், நினைவிடம் கட்டும் பணி நடந்து வருகிறது.
பல்வேறு திட்டம்
ஜெ., உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், பிரமாண்டமான பீனிக்ஸ் பறவை வடிவ கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதன் இடது பகுதியில், ஜெ., அருங்காட்சியம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, முழுதும் கிரானைட் பதிக்கப் பட்ட கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. இதில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்படங்கள், வீடியோ கண்காட்சி போன்றவை இடம் பெறுகின்றன.
டிஜிட்டல் திரையில், பொதுமக்களின் கேள்விகளுக்கு, ஜெ., பதில் அளிப்பது போன்ற சிறப்பு ஏற்பாடும் செய்யப்படுகிறது. ஜெ., பிரமாண்ட புகைப்படத்திற்கு, பல வண்ண மலர்களை, பொதுமக்களே கம்ப்யூட்டரில் தேர்வு செய்து துாவும் வசதியும் செய்யப்படுகிறது. அவ்வாறு, துாவும் மலரின் வாசமும், அந்த அரங்கில் வீசும்.
இதேபோல, பீனிக்ஸ் பறவை கட்டடத்தின் வலது பகுதியில், அறிவுசார் பூங்கா கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. அங்கு, ஜெ., அரசு செயல்படுத்திய, மாணவர்களுக்கான இலவச லேப்டாப், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல் விளக்கங்கள் அமையஉள்ளன.
பராமரிப்பு
அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா பணிகளை மேற்கொள்ள, செய்தி மக்கள் தொடர்பு துறை வாயிலாக, அரசிடம், 12.32 கோடி ரூபாய் கேட்கப்பட்டு இருந்தது. அந்த நிதியை, தற்போது அரசு ஒதுக்கிஉள்ளது.பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் வாயிலாக, இப்பணிகள் மேற்கொள்ளப் பட உள்ளன. தற்போது ஒதுக்கப்பட்ட நிதியில், அறிவு சார் பூங்கா மற்றும் அருங்காட்சியகம் பராமரிப்பு, சி.சி.டி.வி., கேமரா கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE