சென்னை:தமிழ் பதிப்புலக முன்னோடியான, 'க்ரியா' ராமகிருஷ்ணன், 75, காலமானார்.
தமிழ் பதிப்புலகத்தின் முன்னோடி; தெலுங்கை தாய்மொழியாககொண்டவர், 'க்ரியா' பதிப்பகத்தின் உரிமையாளர் எஸ்.ராமகிருஷ்ணன். சென்னை, பெசன்ட் நகரில் வசித்து வந்தார். கொரோனா பாதிப்பால், சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சமூகப் பணித்துறை கல்வியை, லயோலா கல்லுாரியில் முடித்த எஸ்.ராமகிருஷ்ணன், விளம்பர துறையில் பணியாற்றினார். தன், 30வது வயதில், க்ரியா பதிப்பகத்தை துவங்கினார். சுற்றுச்சூழல், சுகாதாரம், தத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறை கள் சார்ந்த புத்தகங்களை நிறைய பதிப்பித்தார். பின், ஹிந்தி, வங்கம், கன்னடம், பிரஞ்சு உள்ளிட்ட மொழிகளில் உள்ள தரமான நுால்களை, தமிழுக்கு மாற்றி பதிப்பித்தார்.
கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவனின் ஆய்வு நுாலான, 'எர்லி தமிழ் எபிரகிராபி பிரம் த எர்லியஸ்ட் டைம்ஸ் டு த சிக்ஸ்த் செஞ்சுரி' என்ற நுாலை வெளியிட்டார். அதேபோல, மூத்த தமிழ் எழுத்தாளர்களின் நுால்களையும் பதிப்பித்தார். அவர், ரோஜா முத்தையா நுாலகம் மற்றும் மொழி அறக்கட்டளை உள்ளிட்டவற்றின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றினர்.
சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக, அவரின், 'தற்கால தமிழ் அகராதி' வெளிவந்தது. அதுவும், ஏற்கனவே வெளியான, தற்கால தமிழ் மரபு தொடர் அகராதியும், அவரின் சிறந்த தமிழ் பணியால் விளைந்தவை.அவரின் மறைவுக்கு, தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் இலக்கியவாதிகள், கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE