சென்னை : ''இனிவரும் 14 முதல் -28 நாட்கள் மிகவும் முக்கியமானவை என்பதால் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்'' என அனைத்து மாவட்ட நிர்வாகங்களையும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் கொரோனாதொற்று குறைந்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் ஒற்றை இலக்குகளில் தொற்று பதிவாகி வருகிறது. தீபாவளி பண்டிகை முடிந்துள்ளதால் இனிவரும் காலங்களில் கொரோனா தொற்றின் இரண்டாம் கட்ட அலை ஏற்படலாம் என்பதால் சோதனையை அதிகரிக்கும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
* கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர் களின் எண்ணிக்கை குறைந்தபடி உள்ளது. பரிசோதனைகளின் எண்ணிக்கையும்காய்ச்சல் முகாம் களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
* தொற்று குறைந்து வருவதால் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை எண்ணிக்கை காய்ச்சல் முகாம்களில் எண்ணிக்கையை குறைக்க வேண்டாம்; வழக்கம் போல் தொடர்ந்து நடைபெற வேண்டும்.
* வரும் நாட்களில் கவனமாக இருக்க வேண்டியிருப்பதால் முககவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் போன்றவற்றில் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும்.
* இணை நோய்கள் உள்ளவர்கள் அறிகுறி உள்ளவர்களை சோதனை செய்ய வேண்டும்.
* கட்டுமான பகுதிகள், நிகழ்ச்சிகள் நடை பெறும் இடங்கள், பணிபுரியும் இடங்களை தொடர்ந்து கண்காணித்து நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
* சில நாட்களாக கட்டுமான பகுதிகளில் கொரோனா தொற்று பரவுகிறது. குறிப்பாக தஞ்சாவூர் மற்றும் சென்னை தண்டையார்பேட்டை கட்டுமான பகுதிகளில் தொற்று கண்டறியப்பட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
* ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை குறைக்கக் கூடாது. படுக்கை மற்றும் ஆக்சிஜன் படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
* இனி வரும் 14 முதல் 28 நாட்கள் மிகவும் முக்கியமானவை. பல மாநிலங்களில் ஆன்டிஜென் பரிசோதனை மேற்கொள்வதால் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர் களையும் கண் காணிக்க வேண்டும்.
* பல்வேறு இடங்களில் முககவசம் அணியாமல் இருப்பது, தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருப்பதை பார்க்கமுடிகிறது.
இவற்றை தடுப்பதுடன் கண்காணிப்பை தீவிரப் படுத்தி தொற்று அதிகரிப்பதை கட்டுப்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.