மேட்டுப்பாளையம்:சிறுமுகை ரேயான் நகரில், நன்கு வளர்ந்த பெரிய மரங்களை, சிலர் வெட்டி கடத்த முயற்சி செய்துள்ளனர். மரம் வெட்டியவர்கள் மீது, வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.சிறுமுகையை அடுத்த ரேயான் நகரில், விஸ்கோஸ் தொழிலாளர்கள் குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஒவ்வொரு வீதிகளிலும், 25 ஆண்டுகளுக்கு முன் நட்ட மரங்கள், பெரியதாக வளர்ந்துள்ளன. இந்த நகரில் நூற்றுக்கணக்கான பல்வேறு வகையான மரங்கள் உள்ளன. நகருக்குள் செல்லும்போது மரங்கள் அடர்த்தியாக இருப்பதால் கண்களுக்கு பசுமையாக இருப்பதுடன், குளிர்ந்த காற்றும் வீசும்.இந்நிலையில் நேற்று முன்தினம், மின்சார கம்பிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் இருந்த, நன்கு வளர்ந்த நான்கு வேப்ப மரங்களையும், ஒரு பாதாம் மரத்தையும் அடியோடு வெட்டி உள்ளனர். இந்த மரங்களை கடத்திச் செல்ல, மினிடோர் வாகனத்தில் ஏற்றும்போது, அப்பகுதி ஊராட்சி வார்டு உறுப்பினர் ராஜேஸ்வரி தடுத்துள்ளார்.ரேயான் நகரில் குடியிருப்பவர்களில் சிலர், மரங்களை வெட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 'இடையூறாக இருந்த காரணத்தால் தான், மரங்கள் வெட்டப்பட்டு உள்ளது' என, அப்பகுதியை சேர்ந்த சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மோதல் ஏற்பட்டது.இலுப்பநத்தம் ஊராட்சி தலைவர் ரங்கசாமியிடம் கேட்டபோது, ''நேற்று முன் தினம் மின்தடை இப்பகுதியில் இருந்ததால் மின் கம்பிகளுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை மட்டும் வெட்ட வாய்மொழியாக அனுமதி வழங்கப்பட்டது. மரங்களை அடியோடு வெட்ட யாருக்கும் அனுமதி வழங்கவில்லை,'' என்றார்.மேட்டுப்பாளையம் தாசில்தார் சாந்தாமணியிடம் கேட்டபோது, ''உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து, மரத்தை யார் வெட்டினர் என்பது குறித்து, விசாரணை செய்து, சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். நன்கு வளர்ந்த, 5 மரங்களை வெட்டி கடத்த முயற்சி செய்து செய்தவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE