மேட்டுப்பாளையம்:மருதுாரில் வேளாண் அலுவலர் குடியிருப்பு, இடியும் நிலையில் உள்ளது. இதனால் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களுக்கு, ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.காரமடையை அடுத்த மருதுாரில், கிராம நிர்வாக அலுவலகம், ரேஷன் கடை, வேளாண் அலுவலர் குடியிருப்பு, நூலகம் ஆகிய அரசு கட்டடங்கள் உள்ளன. இதில் வேளாண் அலுவலர் குடியிருப்பு கட்டி, 25 ஆண்டுகளுக்கு மேலானதால், கட்டடத்தின் மேல் கூரை, சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, இடிந்து விழும் நிலையில் உள்ளது.இக்கட்டடம் அருகே, கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. பல்வேறு சான்றிதழ்களில் கையெழுத்து பெறுவதற்காக, ஏராளமான பொதுமக்கள், தினமும் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். இவர்கள் ஓய்வெடுக்க, இடியும் நிலையில் உள்ள வேளாண் அலுவலர் குடியிருப்பில், நிற்கின்றனர்.தற்போது மழைக்காலம் என்பதால், பழைய கட்டடத்தின் சுவர்கள் மழையில் நன்கு நனைந்து, எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதனால் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வருபவர்களின், உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.'எனவே இக்கட்டடத்தை இடிக்க, வேளாண் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மருதுார் ஊராட்சி தலைவர் பூர்ணிமா கூறுகையில், ''அலுவலர் குடியிருப்பு கட்டடம், இடியும் நிலையில் உள்ளதால், பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இக்கட்டடத்தை இடிக்கும்படி, மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, வேளாண் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE