பெ.நா.பாளையம்;பருவமழையால், சின்னத்தடாகம் வட்டாரத்தில் உள்ள சூளைகளில் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி விட்டது. வானம் எப்போதும் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.தினமும் மழை பெய்கிறது. வெயில் சில மணி நேரம் மட்டுமே நீடிக்கிறது. இதனால், சின்னத்தடாகம் வட்டாரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட செங்கற்களை காய வைக்க முடியாததால், செங்கல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, செங்கல் உற்பத்தியாளர் கூறியதாவது:சின்னத்தடாகம், கணுவாய், காளையனுார், வீரபாண்டி, பெரியதடாகம் உள்ளிட்ட பகுதிகளில் நுாற்றுக்கணக்கான செங்கல் சூளைகள் உள்ளன. மழை காரணமாக செங்கல் சூளைகளில் அமைக்கப்பட்டுள்ள ஷெட்டுகளை சுற்றியும், நீர் தேங்கி நிற்கிறது. இதனால் செம்மண்ணை குழைத்து, அச்சுகளிலோ, செங்கல் உற்பத்தி இயந்திரத்திலோ போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மீறி உற்பத்தி செய்யப்படும் பச்சை செங்கற்களை, வெயில் இல்லாததால், உலர வைக்க முடியவில்லை. சாதாரண நாட்களில் ஷெட்டுகளில் வைக்கப்படும் பச்சை செங்கற்கள், ஒரு வாரத்தில் நன்கு காய்ந்து விடும். பின், அதை சேம்பரில் வைத்து வேக வைத்து, விற்பனைக்கு கொண்டு செல்ல முடியும். மழையால் பச்சை செங்கற்கள் காய்வதில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் செங்கல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டிச., ஜன., மாதங்களில் காற்றில் ஈரப்பதம் அதிகம் இருக்கும் என்பதால், பச்சை செங்கற்களை உலர, இரண்டு முதல் மூன்று மாதம் ஆகலாம். அவசரத்தில் பச்சை செங்கற்களை சேம்பர்களில் வைத்து வேக வைக்க முயன்றால், அவை உடைந்து விடும் அபாயம் உள்ளது. இதனால், பெரும் நஷ்டமடையும் வாய்ப்பு உண்டு.இவ்வாறு, செங்கல் உற்பத்தியாளர்கள் கூறினர்.தற்போது, 3 ஆயிரம் எண்ணிக்கை கொண்ட சேம்பர் செங்கல், 18 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. சின்னத்தடாகம் வட்டாரத்தில் செங்கல் சூளை ஒன்றில் நாள் ஒன்றுக்கு, 20 ஆயிரம் செங்கல் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், தொடர் மழை காரணமாக செங்கல் உற்பத்தி குறையத் தொடங்கியதால், தேவை அதிகமாகி, செங்கல் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. சின்னத்தடாகம், நஞ்சுண்டாபுரம், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளில் நுாற்றுக்கணக்கான பீகார் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.இவர்களில் பெரும்பகுதியினர், அம்மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்க சில நாட்களுக்கு முன் சென்றனர். அவர்கள் யாரும் இதுவரை ஊர் திரும்பவில்லை. இதே போல மதுரை, புதுக்கோட்டை, தேவாரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் இன்னும் ஊர் திரும்பாததால், செங்கல் உற்பத்தி பணி முடங்கி கிடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE