அன்னுார்:அன்னுார் ஒன்றியத்தில், சிறிய கிராமமாக இருந்தாலும், அனைத்து வசதிகளுடன் இருக்கும் சொக்கம்பாளையம், பிற கிராமங்களுக்கு முன் உதாரணமாக திகழ்கிறது.அன்னுாரில் இருந்து மூன்று கி.மீ., தொலைவில், சொக்கம்பாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், 300 குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றனர். ஆனால், 3,000 குடும்பங்கள் வசிக்கும் ஊரில் கூட இல்லாத பல வசதிகள் இந்த கிராமத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பிற கிராமத்தினர் ஆச்சர்யப்படும் அளவுக்கு, இங்கு பள்ளிகள், விடுதிகள், வங்கி ஆகியவை அமைந்துள்ளன.இது குறித்து இந்த கிராமத்துப் பெரியவர்கள் கூறியதாவது:அன்னுார் தாலுகாவில், இந்த சிறிய கிராமத்தில் இருந்து ஐந்து பேர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றுள்ளனர். 1934ல் அப்போதே காந்தி நிர்ணயித்த நன்கொடையை செலுத்தி, மகாத்மா காந்தியை எங்கள் ஊருக்கு அழைத்து வந்துள்ளோம். இதனால் காந்தி பெயரால் பல சேவைகள் இங்கு செய்யப்பட்டுள்ளன.இங்கு ஆதிதிராவிடர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியருக்கு, என, தனித்தனியாக ஐந்து அரசு விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில், மாணவ, மாணவியருக்கு அனைத்தும் இலவசம். கோவை மாவட்டத்தில் ஒரே கிராமத்தில், 5 அரசு மாணவ, மாணவியர், விடுதி இருப்பது, இந்த கிராமத்தில் மட்டும் தான். ஆயிரம் பேர் கூட வசிக்காத இங்கு அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதை தவிர தேசிய வித்தியாசாலை என்னும் அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளியும் செயல்படுகிறது. இந்த பள்ளியில் அரசு தரும் 14 விலையில்லா பொருட்களுடன், நன்கொடையாளர்கள் வாயிலாக சீருடை, வண்ண உடை, அடையாள அட்டை, ஷூ, டை என தனியார் பள்ளிக்கு இணையாக பொருட்கள் வழங்கப்படுகின்றன. எந்த கட்டணமும் வசூலிப்பது இல்லை. ஸ்மார்ட் வகுப்பறையில் தான் பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன.அன்னுார் ஒன்றியத்தில் 4 கிளை நுாலகங்கள் மட்டுமே உள்ளன. அதில் ஒன்று இந்த கிராமத்தில் உள்ளது. மேலும் பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை உள்ளது. துணை சுகாதார நிலையம் உள்ளது. காந்தி இங்கு வந்து சென்றதன் நினைவாக காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது.இங்கு காந்தி நினைவாக கமிட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் ஆதிதிராவிடர்கள் மற்றும் ஏழை எளிய மக்களின் கல்வி, பொருளாதார மேம்பாட்டிற்கு நிதி உதவி செய்யப்படுகிறது. 50 ஆண்டுகளாக இங்கு உள்ள கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு ஒன்பது நாட்கள் விழா நடத்தப்படுகிறது. தமிழகத்தின் முன்னணி, பக்தி பேச்சாளர்கள் இங்கு வந்து பேசி சென்றுள்ளனர்.ஊருக்கு என்ன தேவை என்றாலும், அரசு அதிகாரிகளுடன் பேசி, வாதாடி, போராடி பெற்று விடுவோம். இது இந்த கிராமத்தினரின் நீண்ட கால வழக்கம். இப்படி பெற்றதன் காரணமாகவே, சொக்கம்பாளையம் தன்னிறைவு பெற்ற கிராமமாக உருவாகியுள்ளது. இவ்வாறு ஊர் பெரியவர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE