கோவை :கோவையில் இன்று மழை தீவிரமடைந்ததால், சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது.கோவையின் சுற்றுப்பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்தது. தாமதமாக மழை துவங்கினாலும், கனமழையாக பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். நொய்யலில் மழைநீர் காட்டாற்று வெள்ளமாக பெருக்கெடுத்ததால், சித்திரைச்சாவடி ஒன்று, இரண்டு அணைக்கட்டுகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்தது. பேரூர் படித்துறை மழைநீரில் மூழ்கியது. வேடபட்டிகுளம், செல்வம்பதி, கோளரம்பதி, கிருஷ்ணம்பதி, செல்வசிந்தாமணி, உக்கடம் பெரியகுளத்திற்கு நீர் வரத்து இருந்தது.

கோவை நகரில் கனமழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பாதாள சாக்கடை பணிகள், சாலை பணிகளுக்காக பல இடங்களில் தோண்டப்பட்ட குழி சரியாக மூடப்படாததாலும், மழைநீர் வடிகால்கள் அடைபட்டிருந்ததால், மழை நீர் வெளியேற வழியின்றி தேங்கியது.
சகதியான சாலைகள்
கோவை அவிநாசி மேம்பாலம் லங்காகார்னர், சோமசுந்தராமில் சந்திப்பு பாலத்திற்கு கீழ் பகுதியில் இரண்டு அடி உயரத்துக்கு மழை நீர் தேங்கியது, ஆர்.எஸ்.புரம் பகுதியில் பாதாளசாக்கடைக்காக தோண்டப்பட்ட குழி சரியாக மூடப்படாததால், டி.பி.சாலை தெற்கு பகுதி சேறும், சகதியுமாக மாறியது. சாய்பாபா காலனி அண்ணா மார்க்கெட், மேட்டுப்பாளையம் சாலை எம்.ஜி.ஆர்., மார்க்கெட் சாலைகள் சகதியாக மாறியது. மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள மாநகராட்சி பஸ் ஸ்டாண்டில் மழைநீர் சூழ்ந்தது.
நேற்று மாவட்டத்தில், 15 மி.மீ., அளவு மழை பெய்தது. அன்னுாரில், 12, கோவை விமானநிலையத்தில், 34.2, மேட்டுப்பாளையத்தில் 17, சூலுாரில், 38, கோவை தெற்கில், 42, பெ.நா.பாளையத்தில், 17, வேளாண் பல்கலையில், 20 மி.மீ., பதிவானது. நேற்று மாவட்டத்தில் சராசரி, 15 மி.மீ., மழை பெய்து. இன்றும் மழை தொடரும் என்று வேளாண் பல்கலை காலநிலை மையம் அறிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE