மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் மைய அலுவலர்களுக்கான, ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது. இதில் புதிய வாக்காளர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் சம்பந்தமாக ஆலோசனைகள் வழங்கப்பட்டன.மேட்டுப்பாளையம், நஞ்சை லிங்கம்மாள் திருமண மண்டபத்திலும், காரமடை ஆர்.வி., கலையரங்கிலும் ஆலோசனை கூட்டம் நடந்தது. தாசில்தார் சாந்தாமணி தலைமை வகித்தார். தேர்தல் பிரிவு துணை தாசில்தார் செல்வராஜ் வரவேற்றார். கூட்டத்தில் கண்காணிப்பாளர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் மைய அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.கோவை வடக்கு ஆர்.டி.ஓ., சுரேஷ் பேசியதாவது:ஓட்டுப்போட தகுதி பெற்ற, 18 வயது பூர்த்தியானவர்கள், படிவம் 6 ஐ பூர்த்தி செய்து, வாக்குச்சாவடி மையத்தில் உள்ள அலுவலரிடம் கொடுக்க வேண்டும். இரண்டு போட்டோக்கள், டி.சி., பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, இவற்றில் ஏதாவது ஒரு ஜெராக்ஸை, படிவத்துடன் இணைத்து வழங்க வேண்டும். வாக்காளர் பட்டியலில், இரு இடங்களில் பெயர்கள் இருப்பவர்கள், வீடுகள் மாற்றியவர்கள், இறந்தவர்களின் பெயர் நீக்குதல் ஆகியவற்றுக்கு, படிவம் 7 ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும். மேலும் வாக்காளர் பட்டியலில், ஏதேனும் திருத்தம் செய்வது என்றால், படிவம் 8 ஐ பூர்த்தி செய்து, திருத்தம் செய்ய சரியான ஆவணங்களை இணைக்க வேண்டும். சட்டசபை தொகுதியில் உள்ள வாக்காளர்கள், ஒரு பாகத்தில் இருந்து, மற்றொரு பாகத்திற்கு, முகவரி மாற்றம் செய்ய, படிவம் 8 எ ஐ பூர்த்தி செய்து சரியான ஆவணங்கள் இணைக்க வேண்டும்.எனவே பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வதற்கான முகாம், இம்மாதம், 21, 22 ஆகிய தேதிகளிலும், டிசம்பர் மாதம், 12, 13 ஆகிய தேதிகளிலும், அந்தந்த வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறும். எனவே பொதுமக்கள், இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு ஆர்.டி.ஒ., சுரேஷ் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE