உடுமலை;தக்காளியை கூழாக்கி, மதிப்பு கூட்டும் இயந்திரம், உடுமலை பகுதிக்கு உற்பத்தியாளர் நிறுவனம் மூலம், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையினர் தெரிவித்துள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு, அனைத்து சீசன்களிலும், சராசரியாக, 15 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக, தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.அறுவடைக்காலங்களில், தக்காளிக்கு விலை வீழ்ச்சி ஏற்படுகிறது. இதை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.அதன்படி, அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்பினைக் குறைத்து மதிப்புக் கூட்டுவதற்காக, 5 நடமாடும் தக்காளி மதிப்புக்கூட்டும் இயந்திரம், கிருஷ்ணகிரி, கோவை, தர்மபுரி மாவட்டங்களுக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்டது.தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ள, திருப்பூர் மாவட்டம், உடுமலைக்கும் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கை, 'தினமலரில்' செய்தி வெளியானது.இது குறித்து, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அதிகாரிகள் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில், தக்காளி சாகுபடி பரப்பு அதிகளவு உள்ளது. அறுவடை காலங்களில், விலை வீழ்ச்சியை தடுக்க, தக்காளியை கூழாக்கி, மதிப்பு கூட்டி, விற்பனை செய்ய, துறை சார்பில், இயந்திரம் வடிவமைக்கப்பட்டு, வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.உடுமலையில் தற்போது செயல்பட்டு வரும், திருப்பூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், கோவை விற்பனைக்குழு கட்டுப்பாட்டில், உள்ள வாகனத்தை, எடுத்து, பயன்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளது.இதன் வாயிலாக, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் சுற்றுப்பகுதி விவசாயிகள் பயன்பெறலாம். மேலும், விபரங்களுக்கு, வேளாண் அலுவலர் - 8012420815, உதவி வேளாண் அலுவலர்கள் - உடுமலை-8754070999, குடிமங்கலம் - 9790457111, மடத்துக்குளம் - 7548816686 என்ற எண்களில், தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE