திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் தி.மு.க.,வினர் பணிகளை ஒதுக்கித் தரும்படி கேட்டு பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டப் பணிகளுக்காக திருக்கோவிலுார் ஒன்றியத்திற்கு 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையை மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு கிராமங்களுக்கும் ஒதுக்கப்பட்டு பணியை ஊராட்சி செயலர்கள் மேற்கொள்ளும் வகையில் திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆனால், ஒதுக்கப்பட்ட பணியை ஊராட்சி செயலாளர்களைத் தவிர்த்து அ.தி.மு.க.,வினர் செய்வதாகவும், மத்திய அரசு திட்டம் என்பதால் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த தி.மு.க.,வினருக்கு 35 சதவீதம் வழங்க வேண்டும் எனக்கோரி நேற்று காலை 10:30 மணியளவில் பி.டி.ஓ., அலுவலகத்தை தி.மு.க.,வினர் முற்றுகையிட்டு பி.டி.ஓ., ராமச்சந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற டி.எஸ்.பி., ராஜூ, இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், உயர் அதிகாரிகளை ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக பி.டி.ஓ., உறுதி அளித்ததை அடுத்து தி.மு.க., வினர் 11:30 மணிக்கு கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE