உடுமலை;பருவ மழைகள் திருப்தியாக பெய்து வருவதால், பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்திற்கு, 5 சுற்றுக்கள் முழுமையாக தண்ணீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தின் கீழ், திருப்பூர், கோவை மாவட்டங்களிலுள்ள, 94,201 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகிறது.இரண்டாம் மண்டல பாசனத்திற்கு, திருமூர்த்தி அணையிலிருந்து, ஆக.,28ல் தண்ணீர் திறக்கப்பட்டது. பாசனத்திற்கு, 21 நாள் திறப்பு; ஏழு நாள் நிறுத்தம் என்ற இடைவெளி அடிப்படையில், நான்கரை சுற்றுக்களில், 8,700 மில்லியன் கன அடி நீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.தென் மேற்கு பருவ மழை திருப்தியாக பெய்ததால், பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், மழையும் பெய்ததால், முதல் இரண்டு சுற்றுக்களில், இடைவெளியில்லாமல், பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் வழங்கப்பட்டது. இதனால், கால்வாய்களில் தொடர்ந்து நீர் சென்றதோடு, மடைகளுக்கும் 'ஷிப்ட்' அடிப்படையில் திறக்கும் நீரின் இடைவெளி குறைந்து, பயிர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. மூன்றாம் சுற்று நீரும், 5 நாட்கள் இடைவெளியில், வழங்கப்பட்டது.இந்நிலையில், தற்போது வட கிழக்கு பருவ மழையும் தீவிரமடைந்துள்ளதால், விவசாயிகள் கருத்து பெற்று, நான்காம் சுற்றும் இடைவெளியில்லாமல், வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதே போல், வட கிழக்கு பருவ மழையால், திட்ட தொகுப்பு அணைகளுக்கு, 1.5 டி.எம்.சி., நீர் வந்தால், இரண்டாம் மண்டல பாசனத்திற்கு முழுமையாக, 5 சுற்றுக்கள் தண்ணீர் வழங்கவும், அடுத்து துவங்க உள்ள, 3ம் மண்டல பாசனத்திற்கும், முழுமையாக, 5 சுற்றுக்கள் தண்ணீர் வழங்க வாய்ப்புள்ளது.பி.ஏ.பி., அதிகாரிகள் கூறியதாவது:நடப்பு ஆண்டு பருவ மழைகள் இயல்பை விட அதிகரித்துள்ளதோடு, அணை நீர்ப்பிடிப்பு பகுதி மட்டுமின்றி, பாசன பகுதிகளிலும் திருப்தியாக பெய்துள்ளது. இரண்டாம் மண்டல பாசனத்திற்கு, சுற்றுக்களில் இடைவெளியில்லாமல், நீர் வழங்கப்படுகிறது. தற்போது, சமவெளியிலும், மழை பெய்து வருவதால், தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளின் கருத்து கேட்டு, நான்காம் சுற்றுக்கு நீர் திறப்பும், முழுமையாக, 5 சுற்று தண்ணீர் வழங்கப்பட உள்ளது. பாசன நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களும் சிறப்பாக வந்துள்ளது. பருவ மழை இதே போல் பெய்தால், மூன்றாம் மண்டல பாசனமும், முன்னதாக துவங்கி, 5 சுற்றுக்கள் முழுமையாக தண்ணீர் வழங்க முடியும்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.மழைக்காலத்தில், தண்ணீர் வீணாவதை தடுக்க, பாசன நீரை, குளங்களுக்கு திருப்பவும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது. அவ்வாறு, செய்தால், அனைத்து பகுதிகளிலும், நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE