பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே ஊராட்சி தலைவர், துணைத்தலைவர் தகராறு காரணமாக, வளர்ச்சிப்பணிகள் பாதிக்கப்படுவதை கண்டித்து, மக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சி எஸ்.மலையாண்டிபட்டணம். இங்கு, அ.தி.மு.க.,வை சேர்ந்த மயில்சாமி ஊராட்சி தலைவராகவும், பா.ஜ.,வை சேர்ந்த ரவி துணைத்தலைவராகவும் உள்ளனர்.'உறவினர்களான இருவருக்குள்ளும், பதவியேற்றதில் இருந்தே ஒத்துழைப்பு இல்லை; ஊராட்சி பொதுநிதியை கையாளும் வங்கிக் கணக்கில் இருந்து நிதி எடுக்க, துணைத்தலைவர் ரவி கையெழுத்துப் போட மறுத்து வந்தார்,' என கூறப்படுகிறது.இதனால், ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகள், அன்றாட பராமரிப்பு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பல முறை பேச்சு நடத்தியும், மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் அளித்தும் பிரச்னை தீரவில்லை.இருவரின் தனிப்பட்ட பிரச்னைக்காக, ஊராட்சி மொத்தமும் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அடிப்படை வசதிகள் செய்யப்படாததை கண்டித்து எஸ்.மலையாண்டிபட்டணம் மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், 50க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்டவர்கள், ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.பொதுமக்கள் கூறுகையில், 'ஊராட்சியில் குடிநீர், ரோடு என அனைத்து அடிப்படை வசதிகளுமே பிரச்னையாக உள்ளது. ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டால், சரியான பதில் இல்லை. தலைவர், துணைத்தலைவரின் கவுரவ பிரச்னைக்காக, ஒட்டுமொத்த ஊருமே பாதிக்கப்படுகிறது. அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.அங்கு வந்த கோமங்கலம் போலீசார் பேச்சு நடத்தியதால், மக்கள் முற்றுகையை கைவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE