பண்ருட்டி:ஆற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., - எம்.எல்.ஏ., தலைமையில் முற்றுகை போராட்டம் நடந்தது.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த கெடிலம் ஆற்றில், பொதுப்பணித் துறை சார்பில், மணல் குவாரி அமைக்க ஏற்பாடு செய்தனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இது தொடர்பாக பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் தீர்வு ஏற்படவில்லை. இந்நிலையில் பெரிய எலந்தம்பட்டு கெடிலம் ஆற்றிலும், காமாட்சிபேட்டை ஊராட்சி எல்லையில் உள்ள ஆற்றிலும், குறிப்பிட்ட அளவில் மணல் எடுக்க, அக்டோபர் 30ம் தேதி, கலெக்டர் சந்திரசேகர சகாமுரி அனுமதி அளித்தார்.
மணலை விழுப்புரம் மாவட்டம் அரசூரில் உள்ள யார்டு மூலம் விற்பனை செய்யவும் உத்தர விட்டார்.அதையடுத்து, குவாரிக்காக பாதை அமைக்கும் பணி, கடந்த, 15ம் தேதி துவங்கியது. இந்நிலையில், கெடிலம் ஆற்றில் மணல் குவாரி பணிகளை நிறுத்தக் கோரி, நெய்வேலி எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் தலைமையில், ஒன்றிய சேர்மன் பாலமுருகன், திருவாமூர் ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன் உட்பட, 100க்கும் மேற்பட்டோர் திரண்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாசில்தார் பிரகாஷ் நடத்திய பேச்சில், ஆர்.டி.ஓ., தலைமையில் மீண்டும் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி முடிவு செய்திடவும், அதுவரை தற்காலிகமாக பணிகளை நிறுத்துவதாகவும் உறுதியளித்தார்.இதை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE