அவிநாசி:தக்காளியில்; நோயை கட்டுப்படுத்த, வேளாண் விஞ்ஞானிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், 800 ஏக்கர் பரப்பில், தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. 160 ஏக்கர் பரப்பில், கத்தரி, 200 ஏக்கர் பரப்பில், மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது. இதில், தக்காளியில், காய் அழுகல் நோய், விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது.பொங்கலுார் வேளாண் அறிவியல் மைய தோட்டக்கலை உதவி பேராசிரியர் ராஜலிங்கம், மண்ணியல் துறை உதவி பேராசிரியர் தேன்மொழி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜா குழுவினர், கள ஆய்வில் ஈடுபட்டு, வழங்கிய ஆலோசனை விவரம்:தக்காளியில், காய் அழுகல் நோய் ஏற்பட, கால்சியம் சத்து பற்றாக்குறையும், சீராக தண்ணீர் அளிக்காததும் தான் காரணம். இது ஒரு நோயல்ல; வினையியல் சார்ந்த குறைபாடு. எனவே, ஒரு செடியில் இருந்து, மற்றொரு செடிக்கு நோய் பரவாது. தண்ணீர் சீராக அளிக்காமல் இருந்தால், செடிகள், கால்சியம் சத்தை எடுத்துக் கொள்ளாது; இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.அதிகளவு தழைச்சத்து அளித்தல், வறட்சி, உப்பு போன்றவற்றாலும், இப்பிரச்னை ஏற்படுகிறது. இது, தக்காளியில் மட்டுமல்ல; கத்தரி, மிளகாய், வெள்ளரி போன்றவற்றிலும் தென்படுகிறது.செடிகளுக்கு, தண்ணீரை சீராக அளிப்பதாலும், 5 கிராம் கால்சியம் நைட்ரேட்டை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதாலும், இதை கட்டுப்படுத்த முடியும். அதிகளவு தழைச்சத்து இடாமல், பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டும் இட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE